பெண்கள் 100 மீட்டர் ஓட்டம்:
ஆசியாவில் சாந்தி பெரேரா முதலிடம்
சிங்கப்பூர்: ஆசியாவுக்கான ஆகச் சிறந்த 100 மீட்டர் ஓட்டப் பந்தய வீராங்கனைகள் பட்டியலில் சிங்கப்பூரின் வெரோனிக்கா சாந்தி பெரேரா (படம்) முதலிடம் வகிக்கிறார். உலக திடல்தடப் போட்டிகள் சங்கம் வரையும் இப்பட்டியலில் சிங்கப்பூரர் ஒருவர் முதலிடம் வகிப்பது இதுவே முதல்முறை.
அண்மையில் நியூசிலாந்தில் நடைபெற்ற திடல்தடப் போட்டிகளின் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்துக்கான தகுதிச் சுற்றில் சாந்தி பெரேரா எடுத்துக்கொண்ட நேரம் 11.46 விநாடி. அது ஒரு தேசிய சாதனை.
மேலும், ஆசியாவில் வேறு எந்த வீராங்கனையும் 100 மீட்டர் பிரிவில் இவ்வளவு வேகமாக ஓடியதில்லை.
"இது எனக்கு ஓர் இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. பல வீராங்கனைகள் இப்பருவத்தில் இன்னும் களமிறங்கவில்லை. அதனால், இது நிச்சயமாக எனது நிலைப்பாட்டைக் குறிக்காது. பல வீராங்கனைகளுக்கு இன்னும் குளிர்காலப் பருவம் நிறைவடையவில்லை. எனினும், இதுவரை சாதனை படைத்ததே எனக்குப் பெரும் மகிழ்ச்சி தருகிறது," என்றார் சாந்தி.
மீண்டும் ஒருநாள் போட்டி தரவரிசையில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியா
சென்னை: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்றதன் மூலம் ஆஸ்திரேலியா முதலிடத்திற்கு முன்னேறியது.
இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் 50 ஓவர் உலகக் கிண்ணப் போட்டி நடைபெறவிருக்கிறது. இப்போது கிடைத்த வெற்றி ஆஸ்திரேலியாவிற்கு பெரும் ஊக்கத்தைக் கொடுக்கலாம். அண்மையில் ஆரோன் பின்ச் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார், அவருக்குப் பிறகு யாவர் ஆஸ்திரேலிய அணியை வழி நடத்துவர், ஆஸ்திரேலியா எப்படி செயல்படும் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது அந்த அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

