பியோங்யாங்: நீருக்கடியில் 'கதிரியக்க சுனாமி'யை ஏற்படுத்தவல்ல ஆளில்லா வானூர்தியைச் சோதித்துப் பார்த்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
தெற்கு ஹம்கியோங் மாநிலத்தை ஒட்டிய கடற்பகுதியில் அந்த 'ரகசிய ஆயுதத்தை' வடகொரியா சோதித்துப் பார்த்தது என்று அந்நாட்டின் அரசாங்க ஊடகமான கேசிஎன்ஏ கூறியது. கடலுக்கடியில் 80 முதல் 150 மீட்டர் ஆழத்தில் 59 மணி நேரத்திற்கும் மேல் பயணம் செய்தபின் அது வெடித்ததாகக் கூறப்பட்டது.
பேரளவு கதிரியக்க அலை மூலம் எதிரிக் கப்பல்களையும் துறைமுகங்களையும் தாக்கும் வகையில் அந்த ஆயுதம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அச்செய்தி குறிப்பிட்டது.
அத்துடன், அந்தக் கடலடி அணுவாயுத ஆளில்லா வானூர்தியை எந்தக் கடலோரப் பகுதியிலும் துறைமுகத்திலும் நிறுத்த முடியும் அல்லது ஒரு கப்பலால் எந்த இடத்திற்கும் இழுத்துச் செல்ல முடியும் என்றும் சொல்லப்பட்டது.
கொரிய தீபகற்பத்தில் வெகுகாலமாகவே பதற்றநிலை நீடித்து வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் வியாழக்கிழமை அமெரிக்காவும் தென்கொரியாவும் கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு ஆகப் பெரிய கூட்டு ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டன.