விளையாட்டுத் துளிகள்

விளையாட்டுத் துளிகள்

2 mins read
3468abe9-b13d-4eee-8c82-3a6eb7bba5e2
-

அதிக கோல்: கேன் முதலிடம்

நேப்பல்ஸ்: இங்கிலாந்து சார்பில் அதிக கோலடித்தோர் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார் அதன் இப்போதைய அணித்தலைவர் ஹேரி கேன். இத்தாலி அணிக்கெதிராக வியாழக்கிழமை நடந்த யூரோ 2024 கிண்ணத் தகுதிச்சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வென்றது. அந்த ஆட்டத்தில் பெனால்டி மூலம் ஒரு கோலடித்தார் கேன். இங்கிலாந்திற்காக அவர் அடித்த 54வது கோல் இது. மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் வெய்ன் ரூனி 53 கோல்களுடன் 2ஆம் இடத்தில் உள்ளார்.

மெஸ்ஸி 800 கோல்

பியூனஸ் அய்ரஸ்: கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்குப் பிறகு காற்பந்து விளையாட்டில் 800 கோல்களை அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் அர்ஜெண்டினா அணித் தலைவர் லயனல் மெஸ்ஸி. பனாமா அணிக்கெதிராக வியாழக்கிழமை நடந்த நட்புமுறை ஆட்டத்தில் அர்ஜெண்டினா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அவ்வணியின் முதல் கோலை 21 வயது இளம் வீரர் தியாகோ அல்மடா அடிக்க, 89வது நிமிடத்தில் கிடைத்த 'ஃபிரீ கிக்' வாய்ப்பு மூலம் அற்புதமாக அதன் இரண்டாவது கோலைப் போட்டார் மெஸ்ஸி. இது அவரது 880வது கோலாக அமைந்தது. போர்ச்சுகலின் ரொனால்டோ இதுவரை 830 கோல்களை அடித்து இருக்கிறார்.

ஆசியக் கிண்ணம்: இந்தியா வேறு நாட்டில் ஆடக்கூடும்

புதுடெல்லி: இவ்வாண்டு ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் பாகிஸ்தானில் நடக்கலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியா தனது அணியை அந்நாட்டிற்கு அனுப்ப வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து, இந்தியா பங்கேற்கும் போட்டிகள் மட்டும் இங்கிலாந்து, ஓமான், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் அல்லது இலங்கையில் இடம்பெறலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த ஒருநாள் போட்டித் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்ளாதேஷ், ஆப்கானிஸ்தான், தகுதிச் சுற்றில் வெற்றிபெறும் அணி என ஆறு அணிகள் இரண்டு பிரிவுகளாக மோதும். இரு பிரிவுகளிலும் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் 'சூப்பர் 4' சுற்றுக்கு முன்னேறும். அதில் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் பொருதும்.