கோலாலம்பூர்: வெளிநாட்டவரை மலேசியாவுக்குள் கடத்தி வந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஒன்பது பேரை அந்நாட்டின் ஊழல் தடுப்பு கண்காணிப்பு அமைப்பு கைது செய்துள்ளது. கைதானவர்களில் மலேசியாவின் ஐந்து குடிநுழைவுத் துறை அதிகாரிகளும் அடங்குவர்.
சந்தேக நபர்கள் சாபா மாநிலம் வழியாக வெளிநாட்டு ஊழியர்களை மலேசியாவுக்குள் கடத்தி வர முயன்றதாகக் கூறப்படுகிறது. பெர்னாமா செய்தி நிறுவனம் இந்த விவரங்களைத் தெரிவித்தது.
கைதான குடிநுழைவு அதிகாரிகளில் இருவர் பெண்கள். கடந்த வியாழக்கிழமையன்று மலேசியாவின் எம்ஏசிசி எனும் ஊழல் தடுப்பு ஆணையம், ஜேபிஎன் எனப்படும் தேசியப் பதிவுப் பிரிவு ஆகியவை இணைந்து நடத்திய தடுப்பு நடவடிக்கையில் அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பெர்னாமா கூறியது.
ஊழல் தடுப்பு ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக பெர்னாமா குறிப்பிட்டது.
கைதான குடிநுழைவு அதிகாரிகள் 30லிருந்து 41 வயதுக்கு உட்பட்டவர்கள். கைதுசெய்யப்பட்ட மற்றவர்கள் 37லிருந்து 43 வயதுக்கு உட்பபட்டவர்கள். அவர்கள் இந்தோனீசியாவைச் சேர்ந்த ஊழியர்களுக்கு முகவர்களாகச் செயல்பட்டனர் என்று சொல்லப்படுகிறது.
சந்தேக நபர்கள், போலியான அடையாளத்தைப் பயன்படுத்தி வெளிநாட்டு ஊழியர்களை சாபாவிலிருந்து கோலாலம்பூருக்குக் கொண்டு சேர்க்க அவர்கள் ஒவ்வொருவருக்கும் சுமார் 2,500 ரிங்கிட் (755 வெள்ளி) கட்டணம் விதித்ததாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டு ஊழியர்களைப் பாதுகாப்பாக கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்துக்கு அழைத்துப் போவதில் அதிகாரிகளும் ஈடுபட்டிருந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
தங்களின் ஐந்து அதிகாரிகள் கைதானதை மலேசியாவின் குடிநுழைவுப் பிரிவு வெளியிட்ட தனி அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டது. சட்டவிரோதமாக மலேசியா வந்த 12 வெளிநாட்டு ஊழியர்களும் கைதுசெய்யப்பட்டனர்.
சாபா வழியாக வெளிநாட்டவர் மலேசியாவுக்குள் கடத்தப்பட்டதாகச் சந்தேகம்; கூட்டு நடவடிக்கையில் பலர் கைது

