வாஷிங்டன்: டிக்டாக் செயலியைப் பயன்படுத்தும் 150 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களைப் பாதுகாப்பது தனது நிறுவனத்தின் பொறுப்பு என்று டிக்டாக் தலைமை நிர்வாக அதிகாரி சியூ ஷுவோ ஸி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். டிக்டாக், சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனம் நடத்தும் சமூக ஊடகச் செயலி.
டிக்டாக்கைப் பயன்படுத்துவோரின் தனிப்பட்ட தகவல்கள் சீன அரசாங்கத்தின் கைகளில் சென்றடையலாம் என்ற அச்சம் நிலவுவதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. சென்ற வாரம் வியாழக்கிழமையன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் தன்னிடம் முன்வைக்கப்பட்ட கடுமையான கேள்விகளுக்குப் பதிலளித்த பிறகு 40 வயது சிங்கப்பூரரான சியூ தனது கருத்துகளை டிக்டாக்கிலேயே காணொளி வாயிலாகப் பதிவிட்டார்.
"அமெரிக்கப் பயனீட்டாளர்களின் தகவல்கள் அந்நாட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும். அவை அமெரிக்க நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் அமெரிக்கர்களால்தான் கண்காணிக்கப்படும்," என்று திரு சியூ காணொளியில் தெரிவித்தார்.
பயீனட்டாளர்களின் பாதுகாப்புக்கு டிக்டாக் தொடர்ந்து ஆக அதிக முக்கியத்துவம் தரும் என்று திரு சியூ காணொளியில் உறுதியளித்தார். குறிப்பாக பதின்ம வயதினருக்கு இந்த அணுகுமுறை பொருந்தும் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
அந்தக் காணொளியை இதுவரை 20 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.
டிக்டாக்கில் சீன அரசாங்கம் தலையிடுவதாகக் கூறப்படுவது, அதில் இடம்பெறும் காணொளிகள் சிறுவர்களின் மனநலனுக்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு போன்றவற்றின் தொடர்பில் திரு சியூவிடம் நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டன. நான்கு மணிநேரத்துக்கும் மேல் நீடித்த நீதிமன்ற அமர்வில் திரு சியூ டிக்டாக்கின் நம்பகத்தன்மையை வலியுறுத்திப் பேசினார்.

