மெர்லயன் கிண்ணம்: சிங்கப்பூரை
வென்றது கம்போடியா
மெர்லயன் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் சிங்கப்பூர் அணியை வென்றுள்ளது கம்போடிய அணி. 22 வயதுக்கு உட்பட்ட இளம் காற்பந்து வீரர்களுக்கான இப்போட்டியில் மூன்றாவதாக முடிக்கும் அணியை நிர்ணயிக்கும் இந்த ஆட்டத்தில் கம்போடியா 2-1 எனும் கோல் கணக்கில் வெற்றிகண்டது.
ஆட்டத்தின் முற்பாதியில் கம்போடியா 2-0 எனும் கோல் கணக்கில் முன்னணியில் இருந்தது. பிறகு 74வது நிமிடத்தில் சிங்கப்பூர் ஒரு கோலைப் போட்டது.
சிங்கப்பூர் அணியின் தொடர் சரிவை இத்தோல்வி எடுத்துக் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
200 மீட்டர் பிரிவில் தேசிய
சாதனை படைத்த சாந்தி பெரேரா
திடல்தடப் போட்டிகளில் பெண்கள் 200 மீட்டர் ஓட்டப் பிரிவில் தேசிய சாதனை படைத்துள்ளார் சிங்கப்பூர் வீராங்கனை சாந்தி பெரேரா (படம்). ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் நடைபெற்ற 'பிரிஸ்பன் கிளாசிக் டிராக்' போட்டியின் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் மூன்றாவதாக வந்த சாந்தி எடுத்துக்கொண்ட நேரம் 23.16 விநாடி.
சென்ற ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுகளில் இப்பிரிவில் சாந்தி எடுத்துக்கொண்ட நேரம் 23.46 விநாடி. இப்போது அதையும் மிஞ்சியுள்ளார்.
தற்போதைய திடல்தடப் போட்டிகளின் பருவத்தில் சாந்தி இருமுறை தேசிய சாதனை படைத்துள்ளார். பெண்கள் 100 மீட்டர் பிரிவிலும் இவர் தேசிய சாதனையைப் படைத்தார்.
இந்நிலையில், சாந்தி அடுத்த கட்டத்திற்குத் தன்னை உயர்த்திக்கொண்டுள்ளதாக இவரின் பயிற்றுவிப்பாளர் லுயிஸ் குன்யா கூறியுள்ளார்.

