ஜோகூர் பாரு: அடுத்த மாதம் வரும் நோன்புப் பெருநாள்வரை மலேசியாவில் போதுமான அளவில் கோழிகள் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் வர்த்தக, வாழ்க்கைச் செலவின அமைச்சர் சலாஹுதீன் அயுப் இதைத் தெரிவித்துள்ளார்.இது குறித்து பயனீட்டாளர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
"விலங்கு மருத்துவச் சேவைப் பிரிவிடமிருந்து எனக்குத் தெளிவான தகவல்கள் கிடைத்துள்ளன. நோன்புப் பெருநாள் வரை போதுமான கோழிகள் இருப்பது அதிகாரத்துவப் புள்ளி விவரங்களின் மூலம் தெரிய வந்துள்ளது," என்று நேற்று முன்தினம் நோன்புப் பெருநாள் சந்தை ஒன்றுக்குச் சென்றபோது திரு சலாஹுதீன் செய்தியாளர்களிடம் சொன்னதாக பெர்னாமா செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
ரமலான் நோன்பு மாதத்திலும் நோன்புப் பெருநாளுக்குப் பிறகும் கோழி விற்பனையை அணுக்கமாகக் கண்காணிக்குமாறு தமது அமைச்சின் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
"அரசாங்கம் தொடர்ந்து கோழி இறைச்சியின் விலையைக் கட்டுப்படுத்தினாலோ ஒரு கிலோ கோழி இறைச்சிக்கு 9.40 ரிங்கிட் (2.80 வெள்ளி) என்ற விலை உச்சவரம்பை விதித்தாலோ அதற்கு இணங்க செயல்படுமாறு நான் வர்த்தகர்களைக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார் திரு சலாஹுதீன்.
"கோழி விநியோகத்தில் பிரச்சினையை எதிர்கொள்ளும் வர்த்தகர்களுக்கும் எமது அமைச்சின் உதவி தேவைப்படுவோருக்கும் கைகொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்," என்றும் அவர் சொன்னார்.

