கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் அரசாங்கம் மலாய் இனத்தவரின் ஒற்றுமைக்கான பேரணியை நடக்கவிடாமல் செய்தது, அந்நாட்டின் அரசமைப்பு சட்டத்திற்கு இணங்க நடக்காத செயலாகும் என்று முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது சாடியுள்ளார்.
இம்மாதம் 19ஆம் தேதியன்று நடைபெறவிருந்த அந்தப் பேரணியில் டாக்டர் மகாதீர் கலந்துகொள்ளவிருந்தார். எனினும், பேரணி நடத்த இடம் கிடைக்காததால் அதை ரத்து செய்யவேண்டியிருந்தது.
திரு அன்வாரின் ஆட்சியில் மலாய் இனத்தவருக்குப் போதுமான முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்று சிலர் குறைகூறி வருகின்றனர். அந்த வகையில் மலாய் இனத்தவருக்கான 12 அம்சங்கள் அடங்கிய பிரகடனத்தைப் பேரணியில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது.
"இந்நடவடிக்கையைத் தடுப்பது, அன்வாரின் அரசாங்கம் மத்திய அமைச்சின் அரசமைப்புச் சட்டத்தையும் அம்னோ கட்சியின் விதிமுறைகளையும் மறுப்பதாகும்," என்றார் டாக்டர் மகாதீர்.

