ஸ்பர்சிலிருந்து வெளியேறினார் என்டோனியோ கோன்டே
லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான டோட்டன்ஹம் ஹாட்ஸ்பரின் நிர்வாகியாக இருந்த என்டோனியோ கோன்டே அப்பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டுள்ளார். இரு தரப்பும் ஒப்புக்கொண்டதற்கு இணங்க கோன்டே பதவி விலகியதாகத் தெரிவிக்கபப்ட்டது.
16 மாதங்களாக ஸ்பர்ஸ் நிர்வாகியாக இருந்து வந்தார் கோன்டே. அவரின் தலைமையில் அக்குழு பிரிமியர் லீக் பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது. எனினும், இப்பருவத்தில் கிண்ணம் வெல்லும் வாய்ப்பை ஸ்பர்ஸ் இழந்துவிட்டது. ஸ்பர்ஸ் கடைசியாக சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்புதான் கிண்ணம் ஒன்றை வென்றது.
டி20 கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா படைத்த உலகச் சாதனை
செஞ்சூரியன்: டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஆக அதிக ஓட்டங்களை விரட்டி வெற்றிபெற்றுள்ளது தென்னாப்பிரிக்க அணி. நேற்று முன்தினம் தென்னாப்பிரிக்காவின் செஞ்சூரியன் பகுதியில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா இச்சாதனையைப் படைத்தது.
முதலில் பந்தடித்த வெஸ்ட் இண்டீஸ் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தது. ஜான்சன் சார்ல்ஸ் 46 பந்துகளில் 118 ஓட்டங்களைக் குவித்தார். இதர பந்தடிப்பாளர்களும் தங்கள் பங்குக்கு ஓட்டங்களைக் குவிக்க, வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 258 ஓட்டங்களை எடுத்திருந்தது.
சவாலான இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணியின் குவின்டன் டிகாக் (படம்) சிறப்பாக விளையாடி 44 பந்துகளில் 100 ஓட்டங்களை விளாசினார்.
இறுதியில் தென்னாப்பிரிக்கா 18.5 ஓவர்களில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் 259 ஓட்டங்களை எடுத்து இலக்கை எட்டியது.

