சோல்: தனது கிழக்குக் கடற்கரைக்கு அருகே உள்ள நீர்ப்பகுதியை நோக்கி வடகொரியா ஏவுகணைகளைப் பாய்ச்சியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. ஏவுகணைகள் நேற்று காலை பாய்ச்சப்பட்டன.
உள்ளூர் நேரப்படி காலை சுமார் 7.50 மணிக்கு பாய்ச்சப்பட்ட ஏவுகணைகள் கிட்டத்தட்ட 370 கிலோமீட்டர் தூரம் சென்றதாக தென்கொரிய ராணுவம் கூறியது. அவை ஜப்பானுக்குச் சொந்தமான பொருளியல் வட்டாரத்துக்கு வெளியே விழுந்ததாக அந்நாட்டு அரசாங்கம் சொன்னது.
அமெரிக்காவின் ஆகாயப் படை விமானங்களை ஏந்தும் கடற்படைக் கப்பலான யுஎஸ்எஸ் நிமிட்சை இன்று தென்கொரியாவின் பூசான் நகரில் உள்ள கடற்படைத் தளத்தில் நிறுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வேளையில் வடகொரியா ஏவுகணைகளைப் பாய்ச்சியுள்ளது.
பூசானில் நிறுத்துவதற்கு முன்பு யுஎஸ்எஸ் நிமிட்ஸ், நேற்று தென்கொரியாவின் தெற்குக் கடற்பகுதியில் அந்நாட்டுப் படைகளுடன் கூட்டு ராணுவப் பயிற்சிகளை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. தென்கொரிய தற்காப்பு அமைச்சு இதைத் தெரிவித்தது. இப்படிப்பட்ட சூழலில் ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டன.
வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளைப் பாய்ச்சுவது ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பாதுகாப்பு மன்றத் தீர்மானங்களை மீறுவதாகும் என்று தென்கொரியா சுட்டியது. இப்போக்கை உடனடியாக நிறுத்துமாறும் தென்கொரியா, வடகொரியாவிடம் சொன்னது.