கோலாலம்பூர்: எதிர்த்தரப்பு தலைவர்கள் மட்டுமல்ல சில அரசாங்கத் தலைவர்களும் லஞ்ச ஊழல் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருவதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் (படம்) தெரிவித்து உள்ளார்.
குறிப்பாக என்னவென்று தெரியவில்லை. ஆயினும் விசாரணை வளையத்தில் எதிர்த்தரப்பினரும் அரசாங்கத் தரப்பினரும் சிக்கி இருப்பதாக எனக்குத் தகவல் சொல்லப்பட்டது.
"அவர்கள் என்ன பதவியில் உள்ளவர்கள் என்பது பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. அதிகாரிகளிடம் இதுபற்றிக் கேட்டேன். அவர்களும் விசாரணை நடப்பது உண்மைதான் என்றார்கள்," என திரு அன்வார் நேற்று நாடாளுமன்றத்தில் வாராந்திர பிரதமரின் கேள்வி நேரத்தின்போது தெரிவித்தார்.
"அவர்கள்மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது அதிகாரிகள், குறிப்பாக தலைமைச் சட்ட அதிகாரி சம்பந்தப்பட்ட விவகாரம்," என்றார் அவர்.
எதிர்த்தரப்பு பெரிக்காத்தான் நேஷனல் உறுப்பினர் சித்தி ஸைலா முஹம்மது யூசோஃப் எழுப்பிய துணை கேள்விக்குப் பிரதமர் அன்வார் பதிலளித்தார்.
குறிப்பிட்ட சிலர்மீது மட்டும் வழக்கு தொடரப்படவில்லை என்பதை உறுதி செய்ய, விசாரணையில் ஆளும் கட்சியினரும் சம்பந்தப்பட்டுள்ளனரா என்பதை விளக்குமாறு அவர் கேட்டிருந்தார்.
அதற்குப் பதிலளித்த பின்னர் பேசிய திரு அன்வார், தமது பிகேஆர் கட்சிக்கு அரசியல் நன்கொடை அளிக்கப்பட்ட விவகாரம் பற்றி தாராளமாக விசாரணை நடத்தலாம் என்று கூறினார். அரசியல் கட்சிகள் நன்கொடை பெற சட்டவிதிகள் அனுமதிக்கின்றன.
"ஆனால், இதற்கு முன்னர் நன்கொடை என்ற பெயரில் ஊழல் நடைபெற்றது. அரசாங்கக் குத்தகைகளைப் பெற்றவர்கள் கட்சிகளுக்கும் நிறுவனங்களுக்கும் நிதி அளித்தார்கள். பிகேஆர் கட்சிக்கும் நன்கொடை என்ற பெயரில் ஊழல் நடந்திருப்பதாகச் சந்தேகித்தால் தாராளமாக விசாரணை நடத்தலாம்," என்று திரு அன்வார் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
முகைதீன் யாசின் அரசாங்கத்தில் ஊழல் நடைபெற்றதாகக் கூறி தங்கள் கட்சித் தலைவர்கள்மீது அரசியல் ரீதியாக வழக்குத் தொடுக்கப்படுவதாக பெரிக்காத்தான் நேஷனல் கட்சித் தலைவர்கள் பிரதமர் அன்வார்மீது குறைகூறி வருகின்றனர்.