சோல்: வடகொரியா எப்போது வேண்டுமானாலும் எந்தப் பகுதியிலும் அணுவாயுதத்தைப் பயன்படுத்தும் என்று அதன் தலைவர் கிம் ஜோங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தென்கொரியாவில் அமெரிக்கப் போர் விமானங்கள் தரையிறங்கியுள்ள வேளையில் அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார்.
அணுகுண்டுகள் தயாரிக்கப்படும் பகுதி ஒன்றை பார்வையிடச் சென்றபோது கிம் இந்தக் கருத்தை வெளியிட்டார் என்று வடகொரியாவின் அதிகாரத்துவ ஊடகமான 'கொரியன் சென்ட்ரல்' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ராணுவ அதிகாரிகள் புடைசூழ கிம் நிற்கும் படங்களை வடகொரிய அரசு ஊடகம் வெளியிட்டது.
தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபடுகின்றன. மேலும், அமெரிக்காவின் போர் விமானம் ஒன்று நேற்று தென்கொரியாவின் பூசான் நகர் வந்து சேர்ந்ததாக செய்திகள் வெளியாயின.
நட்பு நாடுகளின் ஒருங்கிணைந்த ராணுவ பலத்தை நிரூபிக்கும் பொருட்டு அந்த விமானத்தின வருகை அமைவதாக தென்கொரிய தற்காப்பு அமைச்சு கூறியது.
இதுபோன்ற செயல்களைக் கண்டிக்கும் விதமாக வடகொரியா கடந்த சில வாரங்களாக அணுவாயுதம் தொடர்பான செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
தற்போது வடகொரியாவிடம் உள்ள அணு ஆயுதங்கள் இதற்கு முன்னர் இருந்ததைக் காட்டிலும் நவீனமானதாக இருக்கக்கூடும் என்று மிடல்பரி அனைத்துலக ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் ஜார்ஜ் வில்லியம் ஹெர்பர்ட் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவிடம் தாக்கும் வல்லமைபெற்ற சொந்தத் தயாரிப்பு ஏவுகணைகள் 80 முதல் 90 வரை இருக்கக்கூடும் என்று சோல் நகரைத் தளமாகக் கொண்ட தற்காப்பு பகுப்பாய்வுக் கழகம் ஜனவரி மாதம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இதனை நீண்டகாலப் போக்கில் 100க்கும் 300க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையில் உயர்த்த திரு கிம் திட்டமிடுவதாகவும் அது தெரிவித்திருந்தது.