விளையாட்டுத் துளிகள்

விளையாட்டுத் துளிகள்

2 mins read
0e3effeb-17ba-41e6-a209-3316d7fc4259
-

காற்பந்துப் போட்டியை ஏற்று நடத்தும் உரிமையை இழந்த இந்தோனீசியா

ஜகார்த்தா: 'யு-20' எனப்படும் 20 வயதுக்கு உட்பட்ட விளையாட்டாளர்களுக்கான உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை ஏற்று நடத்தும் பொறுப்பு இந்தோனீசியாவிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு நடைபெறவிருந்த அப்போட்டியை இந்தோனீசியா ஏற்று நடத்தவிருந்தது. அதில் இஸ்ரேல் பங்கேற்பதை எதிர்த்து அந்நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. அரசியல் தலைவர்கள் சிலரும் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

மேலும், இஸ்ரேல் அணியை வரவேற்கத் தாம் தயாராய் இல்லை என்பதை பாலி தீவின் ஆளுநரும் மத்திய அரசாங்கத்திடம் தெரிவித்திருந்தார். இஸ்ரேலுக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையே அரசதந்திர உறவு கிடையாது.

யு-20 உலகக் கிண்ணத்தில் இஸ்ரேல் பங்கேற்பதற்கு இந்தோனீசியாவில் இருந்த எதிர்ப்பே போட்டியை ஏற்று நடத்தும் பொறுப்பு அதனிடமிருந்து பறிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

இந்த முடிவை அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் நேற்று முன்தினம் அறிவித்தது. இனி போட்டியை ஏற்று நடத்தும் வாய்ப்பு எந்த நாட்டிடம் ஒப்படைக்கப்படும் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்றும் சம்மேளனம் தெரிவித்தது.

பூப்பந்து: சிங்கப்பூர் பொதுவிருதில்

விக்டர் ஏக்சல்சன்

சிங்கப்பூர்: ஆண்கள் ஒற்றையர் பூப்பந்தில் உலகத் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் விக்டர் ஏக்சல்சன் (படம்) இவ்வாண்டின் சிங்கப்பூர் பொதுவிருதுப் போட்டியில் பங்கேற்கவுள்ளார். சற்று ஓய்வு எடுத்துக்கொள்வதற்காக சென்ற ஆண்டுப் போட்டியில் இவர் பங்கேற்கவில்லை.

உலக விருதையும் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ள 29 வயது ஏக்சல்சன் சிங்கப்பூர் பொதுவிருதை இதுவரை வென்றதில்லை. அதையும் கைப்பற்றும் இலக்குடன் டென்மார்க்கைச் சேர்ந்த இவர் களமிறங்கவுள்ளார்.

சிங்கப்பூர் பொதுவிருதுப் பூப்பந்துப் போட்டி வரும் ஜூன் மாதம் ஆறாம் தேதியிலிருந்து 11ஆம் தேதிவரை நடைபெறும்.