மேசைப்பந்து: நிபந்தனைகளுடன்
ரஷ்ய, பெலரூசிய வீரர்கள் அனுமதி
லவ்சானே: அனைத்துலக மேசைப்பந்துப் போட்டிகளில் ரஷ்ய, பெலரூசிய விளையாட்டாளர்கள் மீண்டும் பங்கேற்க அனைத்துலக மேசைப்பந்துச் சம்மேளனம் அனுமதி வழங்கியுள்ளது. எனினும், அவர்கள் தங்கள் நாடுகளைப் பிரதிநிதிக்காது நடுநிலை போட்டியாளர்களாகப் பங்கேற்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
இவ்வாண்டு மே மாதத்துக்குப் பிறகுதான் இந்த மாற்றம் நடப்புக்கு வரும்.
தங்களின் நாடுகளைப் பிரதிநிதிக்காமல் ரஷ்ய, பெலரூசிய வீரர்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கலாம் என்று அனைத்துலக ஒலிம்பிக் குழு அண்மையில் கூறியிருந்தது. அதற்கு ஏற்றவாறு அனைத்துலக மேசைப்பந்துச் சம்மேளனமும் இவ்வாறு அறிவித்துள்ளது.
ஒரே மாதத்தில் இருமுறை தேசிய சாதனை படைத்த சாந்தி பெரேரா
சிங்கப்பூர்: பெண்கள் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் மீண்டும் தேசிய சாதனையை முறியடித்துள்ளார் சிங்கப்பூர் வீராங்கனை சாந்தி பெரேரா (கோப்புப் படம்). ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியப் பொதுவிருது திடல்தடப் போட்டிகளில் சாதனை படைத்தார் சாந்தி.
100 மீட்டர் பந்தயத்தை 11.38 விநாடியில் முடித்தார் சாந்தி. இதற்கு முன்பு தான் படைத்த தேசிய சாதனையையே 0.08 விநாடி வித்தியாசத்தில் இவர் முறியடித்தார். சென்ற மாதம் மூன்றாம் தேதியன்று நியூசிலாந்து தலைநகர் வெல்லிங்டனில் நடைபெற்ற நியூசிலாந்து திடல்தடப் போட்டிகளின் 100 மீட்டர் பிரிவில் சாந்தி தேசிய சாதனை படைத்திருந்தார்.
நேற்றைய சாதனையைத் தொடர்ந்து இவர் ஆஸ்திரேலிய போட்டிகளின் 100 மீட்டர் பந்தயத்தின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். அரையிறுதிச் சுற்று இன்று நடைபெறுகிறது.

