லண்டன்: பசிபிக் நாடுகளுக்கான தடையற்ற வர்த்தக உடன்பாட்டில் பிரிட்டன் சேர்ந்துகொள்ளவிருக்கிறது. சிங்கப்பூர், ஜப்பான், ஆஸ்திரேலியா உட்பட 11 நாடுகள் இந்த உடன்பாட்டில் இடம்பெற்றுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிறகு பிரிட்டன் பசிபிக் வட்டார நாடுகளுடனான உறவை வலுப்படுத்துவதோடு உலகளவில் வர்த்தகத் தொடர்புகளை வளர்த்துக்கொள்ளும் இலக்குடன் இருக்கிறது. இலக்கை அடைவதற்கு வழிவகுத்துக்கொள்ள இந்த தடையற்ற வர்த்தக உடன்பாட்டில் அந்நாடு சேர்கிறது.
'சிபிடிபிபி' எனப்படும் டிரான்ஸ் பசிபிக் பங்காளித்துவ முழுமையான, படிப்படியான உடன்பாட்டில் பிரிட்டன் சேர வகைசெய்யும் ஒப்பந்தம் வரையப்பட்டுள்ளதை அந்நாட்டுப் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்தார். பிரெக்சிட்டுக்குப் பிறகு இதுவே பிரிட்டன் செய்துகொண்டுள்ள ஆகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம் என்று அவரின் அலுவலகம் கூறியது.
"பிரெக்சிட்டைத் தொடர்ந்து பிறந்துள்ள நீக்குப்போக்கால் ஏற்படும் பொருளியல் ரீதியான பலன்களை இந்த ஒப்பந்தம் எடுத்துக்காட்டுகிறது," என்று திரு சுனக் கூறினார். 2020ஆம் ஆண்டில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது. அதற்குப் பிறகு வளர்ந்துவரும் தொலைதூர நாடுகளுடன் தொடர்புகளை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்து வந்துள்ளது.

