பெய்ஜிங்: மலேசியாவுக்கும் சீனாவுக்கும் இடையே 19 புரிந்துணர்வுக் குறிப்புகள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதன்மூலம் மலேசியாவில் 170 பில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள முதலீடுகளை சீனா செய்ய இருக்கிறது. இந்தத் தகவல்களை சீனாவுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்ட மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற மலேசியா-சீனா வர்த்தக உச்சநிலை மாநாட்டின் நிறைவு விழாவில் கலந்துகொண்ட திரு அன்வார் மலேசியாவில் சீனா முதலீடு செய்ய இருப்பது குறித்து அறிவித்தார்.
சீனா செய்யும் முதலீடுகளில் முதன்மையானவற்றில் தஞ்சோங் மாலிமில் உள்ள உயர் தொழில்நுட்ப வாகன ஆலையை மேம்படுத்துவதும் அடங்கும் என்றார் அவர்.
இந்தத் திட்டம் புதிய எரிசக்தி வாகனங்களை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தங்கள் மலேசியா-சீனா பொருளியல் உறவை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் என்று பிரதமர் அன்வார் கூறினார்.
நிறைவு விழாவுக்கு முன்பு சீனாவின் பல்வேறு தொழில்
துறைகளின் தலைவர்களுடன் திரு அன்வார் சந்திப்பு நடத்தினார்.
இதற்கிடையே, மலேசியாவில் கூடுதல் முதலீடு செய்யுமாறு, முதலீடுகள் கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு வெளிநாடுகளில் செயல்படும் மலேசிய வர்த்தகங்களுக்கு திரு அன்வார் அழைப்பு விடுத்துள்ளார்.
இதன்மூலம் நாட்டின் பொருளியலை மீண்டும் உயிர்ப்பித்து மேம்படுத்தலாம் என்றார் அவர்.
"வெளிநாடுகளில் நீங்கள் முதலீடு செய்யலாம். ஆனால் மலேசியாவுக்குக் கூடுதல் முதலீடுகள் கிடைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்," என்று பெய்ஜிங்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற நோன்பு துறப்பு நிகழ்வில் 300க்கும் மேற்பட்ட மலேசிய வர்த்தகர்கள், சீனாவைச் சேர்ந்த முஸ்லிம் சமூகத் தலைவர்கள் ஆகியோரிடம் திரு அன்வார் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வுக்கு சீனாவில் உள்ள மலேசிய வர்த்தகத் தொழிற்சபையும் சீனாவில் உள்ள மலேசியத் தூதரகமும் ஏற்பாடு செய்தது.
மலேசியாவின் பிரதமராகப் பதவி ஏற்ற பிறகு இதுவே திரு அன்வாரின் முதல் சீனப் பயணம். அவருடன் மலேசியாவைச் சேர்ந்த 200 வர்த்தகப் பேராளர்கள் சீனாவுக்குச் சென்றிருந்தனர்.

