ஜகார்த்தா: மேற்கு இந்தோனீசியாவில் எரிசக்தி நிறுவனமான பெர்த்தாமினாவில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக ஒன்பது பேர் காயமடைந்தனர் என்று அந்த நிறுவனம் நேற்று தெரிவித்தது.
இந்தச் சம்பவம் இதற்கு முன்னர், கடந்த மாதம் நிகழ்ந்த இரண்டு தீ விபத்துகளில், பலர் இறந்ததைத் தொடர்ந்து நிகழ்ந்துள்ளது என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
இது குறித்து அறிக்கை வெளியிட்ட பெர்த்தாமினா நிறுவனம், இந்தோனீசியாவின் சுமத்ரா தீவில் உள்ள டுமாய் என்ற நகரத்தில் சனிக்கிழமையன்று நிகழ்ந்த வெடிப்புச் சம்பவத்தில் சிதறிய கண்ணாடித் துகள்களால் பலருக்கு இலேசான காயம் ஏற்பட்டதாகக் கூறியது. அத்துடன் அந்நகரில் உள்ள பல வீடுகளுக்கும் சேதம் ஏற்படுத்தியதாக அறிக்கை விளக்கியது.
வெடிப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஜகார்த்தாவில் உள்ள பெர்த்தாமினா எண்ணெய் நிறுவன முனையத்தில் மார்ச் மாதம் 3ஆம் தேதி நிகழ்ந்த தீ விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்தனர் என்று ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் கூறுகிறது.
பின்னர், மார்ச் மாதம் 26ஆம் தேதி பாலி தீவுக்கும் இந்தோனீசியாவின் லோம்போக் பகுதிக்கும் நிறுவனத்தின் எண்ணெய்யை ஏற்றிச் சென்ற கப்பல் தீப்பிடித்ததில் மூவர் மரணமடைந்தனர். சனிக்கிழமை நடந்த விபத்துக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்ட பெர்த்தாமினா நிறுவனம் தீ அணைக்கப்பட்டு விட்டதாகவும் அதைத் தொடந்து மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் கூறியது.
தீயினால் நிறுவனத்தின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவை தவிர மற்ற பகுதிகள் வழக்கம்போல் செயல்பட்டு வருவதாகவும் பெர்த்தாமினா நிறுவனம் விளக்கமளித்தது.
இந்தத் தீச் சம்பவத்தால் எண்ணெய் உற்பத்தி, விநியோகம் பாதிக்கப்படுமா என்ற கேள்விக்கு உடனடியாக நிறுவனத்தின் பேச்சாளர் பதிலளிக்கவில்லை.
எனினும், எண்ணெய் இருப்பில் பாதிப்பில்லை என்று அவர் சொன்னதாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது.

