புலுமெனாவ் (பிரேசில்): பிரேசிலில் உள்ள பாலர்பள்ளி ஒன்றில் நிகழ்த்தப்பட்ட கொடரித் தாக்குதலில் குறைந்தது நான்கு சிறுவர்கள் மாண்டுவிட்டனர். குறைந்தது ஐவர் காயமுற்றனர்.
25 வயது ஆடவர் ஒருவர் சிறிய கோடரி ஒன்றைக் கொண்டு தாக்குதலை மேற்கொண்டிருக்கிறார். இச்சம்பவம் சான்டா கெட்டரீனா மாநிலத்தில் உள்ள புலுமெனாவ் நகரில் நேற்று முன்தினம் நேர்ந்தது.
தாக்குதல்காரர் காவல்துறையினரிடம் சரணடைந்தார். அவருக்கும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட பாலர்பள்ளிக்கும் தொடர்பு ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை.
மாண்ட சிறுவர்கள் ஐந்திலிருந்து ஏழு வயதுக்கு உட்பட்டவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாக்குதலுக்குப் பின்னால் இருக்கும் காரணத்தை அறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சில தாக்குதல்கள் நடத்தப்படக்கூடும் என்ற வதந்திகள் பரவிய நிலையில் புலுமெனாவ் நகரில் மற்ற பள்ளிகளிலும் வகுப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

