கோலாலம்பூர்: மின் சிகரெட்டுகளை எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் அனைத்து வயதினருக்கும் விற்பனை செய்ய அனுமதிக்கும் மலேசிய அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய நடவடிக்கையைத் தொடர்ந்து பதின்ம வயது இளையர்கள் அதனைப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
மின் சிகரெட்டுகளில், திரவ, ஜெல் வடிவத்தில் பயன்படுத்தப்படும் நிக்கோட்டினை இம்மாத தொடக்கம் முதல் விஷப் பொருள்கள் பட்டியலில் இருந்து மலேசிய அரசாங்கம் நீக்கியது.
பட்டியலில் இருந்து அவற்றை நீக்குவதற்கு விஷப் பொருள்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. ஆனால், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சுகாதார அமைச்சர் ஜாலியா முஸ்தபா அதனை நீக்கினார். இது மலிவு விலையில் கிடைப்பதைத் தடுக்கும் வகையில் அவற்றுக்கு வரி விதிக்கப்படும் என்று பிரதமர் அன்வார் கூறியிருந்தார்.
வரும் மே மாதம், புகையிலை கட்டுப்பாட்டு மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் என்றும் அவர் சொன்னார். அந்த மசோதா, 2007ஆம் ஆண்டிற்குப் பிறகு பிறந்தவர்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் புகையிலை, மின் சிகரெட் பொருள்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும்.
ஆனால் இப்போதைக்கு, 18 வயதிற்கும் குறைவானவர்கள் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் திரவ, ஜெல் நிக்கோட்டின் திரவங்களைச் சுதந்திரமாக பயன்படுத்துவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
"நிக்கோட்டினைப் பயன்படுத்தத் தொடங்கினால், குறுகிய காலத்தில் அடிமையாகிவிடுவார்கள்," என்று மலேசியாவின் தேசிய புற்றுநோய் சங்கத்தின் மருத்துவ இயக்குநர் டாக்டர் முரளிதரன் சொன்னார்.
புகையிலை தடைச் சட்டம் நடப்புக்கு வரும் வரை விஷப் பொருள் பட்டியலில் இருந்து திரவ நிக்கோடினை நீக்குவதை நிறுத்தி வைக்க வேண்டுமென்று பல அமைப்புகள் அரசங்கத்தை வலியுறுத்தி உள்ளன.