டெல் அவிவ்: இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது ஒருவர் மாண்டார். உயிரிழந்தவர் இத்தாலியைச் சேர்ந்த சுற்றுப்பயணி.
வாகனத்தைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில் ஆகக் கடைசி நிலவரப்படி மேலும் ஐந்து சுற்றுப்பயணிகள் காயமடைந்தனர்.
இச்சம்பவத்திற்கு சில மணிநேரத்துக்கு முன்பு மேற்குக் கரைப் பகுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் இஸ்ரேலைச் சேர்ந்த இரண்டு பதின்ம வயது சகோதரிகள் கொல்லப்பட்டனர். பிரிட்டிஷ் குடியுரிமை வைத்திருந்த அவ்விருவரின் தாய் காயமுற்றார்.
காஸாவிலும் லெபனானிலும் இரவு முழுவதும் தாக்குதல்கள் இடம்பெற்றதைத் தொடர்ந்து இச்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. மேலும், ஜெருசலத்தில் உள்ள அல்-அக்சா பள்ளிவாசலை இஸ்ரேலிய காவல்துறையினர் சென்ற வாரம் சோதனையிட்டனர்.
இந்நிலையில், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான பதற்றநிலை மேலும் மோசமடைந்துள்ளது. நேற்று முன்தினம் நிகழ்ந்த தாக்குதலில் வாகனம் ஒன்று டெல் அவிவ் நகரின் பிரபல நடைபாதையும் சைக்கிள் பாதையும் இருக்கும் பகுதிக்கு அருகே உள்ள சாலையில் சிலர்மீது மோதியது. வாகனத்தின் ஓட்டுநரை அங்கிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் சுட்டுக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஓட்டுநர் துப்பாக்கியை எடுக்க முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டார். மாண்டவர், காஃபர் காசெம் எனும் நகரைச் சேர்ந்த அரபு இனத்தவர் என்று சில தகவல்கள் கூறுகின்றன. காஃபர் காசெம், அரபு இனத்தவர் பலர் வாழும் இஸ்ரேலிய நகரம்.

