ஃபுச்சுவோ(சீனா): சீனா, தைவானைச் சுற்றி மூன்று நாள் ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. தைவானிய அதிபர் சாய் இங்-வென், அமெரிக்க நாடாளுமன்ற நாயகர் கெவின் மெக்கார்த்தியைச் சந்தித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்குடன் சீனா ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்கிறது. தைவான் தனக்குச் சொந்தமான பகுதி என்று சீனா கூறி வருகிறது.
சீனாவின் நடவடிக்கைகளுக்கு அமைதியாகப் பதிலடி கொடுக்கப்போவதாக தைவானியத் தற்காப்பு அமைச்சு கூறியது. திருவாட்டி சாய், அமெரிக்காவிலிருந்து தைவானுக்குத் திரும்பிய பிறகு ராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று சீனா அறிவித்திருந்தது.
திருவாட்டி சாய், திரு மெக்கார்த்தியைச் சந்தித்ததற்கு பெய்ஜிங் கண்டனம் தெரிவித்திருந்ததையடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆகக் கடைசி நிலவரப்படி சீனாவைச் சேர்ந்த 71 ஆகாயப் படை விமானங்கள் தைவானின் நீர்ப் பகுதிக்குள் நுழைந்ததாக தைவானிய தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

