ஜெருசலம்: சிரியாவிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டதை அடுத்து, அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் நேற்று முன்தினம் சிரியாவின் ராணுவத் தளங்களைத் தாக்கியது.
நேற்று முன்தினம் பின்னிரவு நேரத்தில் இஸ்ரேல் நடத்திய இந்தத் தாக்குதல் காரணமாக எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கோலான் ஹைட்ஸ் மலைப்பகுதியை நோக்கி சிரியாவிலிருந்து ஆறு ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டன.
அப்போது கோலான் ஹைட்ஸ் மலைப்பகுதிக்கு அருகில் உள்ள நகரங்களில் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது.
இதையடுத்து, இஸ்ரேல் நடத்திய தாக்குதல் காரணமாக சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள பல இடங்களில் வெடிப்புச் சத்தம் கேட்டதாகச் சிரியா
அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகம் தெரிவித்தது.
சிரியாவின் ஏவுகணைப் பாய்ச்சும் சாதனங்களை பீரங்கிகள், ஆளில்லா வானூர்திகள் கொண்டு தகர்த்ததாக இஸ்ரேல் கூறியது.
அதையடுத்து, சிரியா ராணுவ முகாம்கள், பீரங்கிப் படைகள், எல்லைக் கண்காணிப்புக் கருவிகள் ஆகியவற்றை இஸ்ரேலியப் போர் விமானங்கள் தாக்கின.
சிரியாவின் கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பகுதிகளிலிருந்து இஸரேலுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சிரியாதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தாக்குதலைப் போராளி அமைப்புகள் நடத்தினாலும் சிரியா அதற்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் கூறியது.
இஸ்ரேலின் இறையாண்மைக்குப் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய எந்த ஒரு செயலும் ஏற்றுக்கொள்ளப்படாது என்று அந்நாட்டின் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
இதற்கிடையே, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலை முறியடிக்க தனது போர் விமானங்கள் முழுவீச்சில் செயல்பட்டதாக சிரியாவின் தற்காப்பு அமைச்சு கூறியது.
இஸ்ரேல் பாய்ச்சிய சில ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தியதாகவும் அது தெரிவித்தது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதல் காரணமாக சிரியாவுக்கு உயிருடற்சேதம் ஏற்படவில்லை என்றும் பொருட்சேதம் மட்டுமே ஏற்பட்டதாகவும் அது தெரிவித்தது.

