மணிலா: பிலிப்பீன்சும் அமெரிக்காவும் இணைந்து மிகப் பெரிய போர்ப் பயிற்சியை நேற்று தொடங்கின. கடந்த 38 ஆண்டுகளில் இதுவே இவ்விரு நாடுகள் இணைந்து நடத்தும் ஆகப் பெரிய கூட்டு ராணுவ நடவடிக்கையாகும்.
போர்ப் பயிற்சியின் ஒரு பகுதியாக தென் சீனக் கடலில் போர்க் கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
போர்ப் பயிற்சியின்போது பிலிப்பீன்ஸ் கடற்படைக்குச் சொந்தமான பயன்படுத்தப்படாத, பழைய போர்க் கப்பல் பிலிப்பீன்ஸ் ராணுவம், அமெரிக்க ராணுவம் ஆகியவற்றால் பாய்ச்சப்படும் ஏவுகணைகளால் தகர்க்கப்படும்.
இது இம்மாதம் 26ஆம் தேதியன்று பிலிப்பீன்சிலிருந்து ஏறத்தாழ 12 கடல் மைல் தூரத்தில் தென்சீனக் கடலில் நடத்தப்படும். இந்தக் கடற்பகுதியை பிலிப்பீன்சும் சீனாவும் உரிமை கொண்டாடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தென்சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள இந்தப் போர்ப் பயிற்சி நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்தப் போர்ப் பயிற்சிக்கு 'பலிகாட்டான்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தகலோக் மொழிச் சொல்லுக்கு ஒன்றிணைந்து செயல்படுவது என்று பொருள்.
இப்போர்ப் பயிற்சிக்கான தொடக்க விழா, பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள அந்நாட்டு ஆயுதப் படைகளின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இதில் இருநாடுகளின் முக்கிய ராணுவ அதிகாரிகளும் கலந்துகொண்டனர். போர்ப் பயிற்சி இம்மாதம் 28ஆம் தேதி வரை நடைபெறும்.
"அமெரிக்கா, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளின் ஆயுதப் படைகளுக்கு இணைந்து செயல்படும் ஆற்றல் இருப்பதை இந்த மிகப் பெரிய போர்ப் பயிற்சி நிரூபிக்கிறது. போர் மூண்டால் எதிரியை எதிர்த்துப் போரிட நாங்கள் தயாராக இருக்கிறோம். நிலம், கடல், வானம் ஆகியவற்றிலிருந்து தாக்குதல் நடத்தும் ஆற்றல் எங்களுக்கு இருக்கிறது," என்று 'பலிகாட்டான்' போர்ப் பயிற்சியின் செய்தித்தொடர்பாளர் கர்னல் மைக்கல் லோஜிக்கோ கூறினார். போர்ப் பயிற்சியை பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் நேரில் பார்வையிடுவார் என்று தெரிவிக்கப்பட்டது.