புத்ராஜெயா: ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஜோகூரில் எட்டு பதின்மவயதினரின் உயிரைப் பறித்த கோர விபத்துடன் தொடர்பான கார் ஓட்டுநர், குற்றமற்றவர் என்று மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
இதையடுத்து, 28 வயது திருவாட்டி சேம் கி டிங் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி அதிகாலை 3.20 மணி அளவில் அந்த விபத்து நிகழ்ந்தது.
சட்டவிரோதமாக மாற்றி அமைக்கப்பட்டிருந்த மிதிவண்டிகளை இளையர்கள் பலர் ஓட்டிக்கொண்டிருந்தனர்.
அவர்களது மிதிவண்டிகளில் பிரேக், விளக்குகள் அகற்றப்பட்டிருந்தன. அதுமட்டுமல்லாது, மிதிவண்டிகளின் கைப்பிடிகளும் தாழ்த்தப்பட்டிருந்தன.
அப்போது அந்தச் சாலையில் போதுமான வெளிச்சம் இல்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
திருவாட்டி சேமின் கார் மோதியதில் எட்டு இளையர்கள் மாண்டனர். அவர்கள் 13 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
கீழ் நீதிமன்றத்தில் நடைபெற்ற முதல் வழக்கு விசாரணையில் விபத்து நிகழ்ந்தபோது திருவாட்டி சேம் மது அருந்தியிருக்கவில்லை என்றும் அவர் வேக வரம்புக்கு உட்பட்டு கார் ஓட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அதை எதிர்த்து அரசாங்க வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்தனர்.
திருவாட்டி சேம் கவனக்குறைவுடன் வாகனம் ஓட்டியதாக உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. அவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 6,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டன.
திருவாட்டி சேமுக்குத் தண்டனை விதிப்பதன் மூலம் சாலைகளில் சட்டவிரோத மிதிவண்டிப் பந்தயங்களில் ஈடுபவது ஏற்றுக்கொள்ளப்படுவதாக இளையர்களுக்குத் தவறான புரிதல் ஏற்படும் என்று மலேசியர்கள் பலர் அதிருப்திக் குரல் எழுப்பினர்.
இந்நிலையில், இந்த வழக்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
திருவாட்டி சேம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு முறையற்றது, தவறானது என்று மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு ஒருமனதாகக் கூறியது.
எனவே, அவர் குற்றமற்றவர் என்றும் அவர் விடுவிக்கப்படுவதாகவும் தீர்ப்பளிக்கப்பட்டது.
விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் அது கார் ஓட்டுநரின் தவறு என்று கண்மூடித்தனமாகக் கூறிவிடக்கூடாது என்று நீதிபதிகள் கூறினர்.
விடுதலை செய்யப்பட்ட பிறகு, திருவாட்டி சேம் செய்தியாளர்களிடம் பேசினார்.
விடுதலை செய்யப்பட்டாலும் இளையர்களின் உயிரிழப்பால் தாம் தொடர்ந்து மிகக் கடுமையான மனவுளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தாம் ஓட்டிச் சென்ற கார் அவர்கள் மீது மோதி அவர்களுக்கு மரணம் விளைவித்தபோதிலும் அதை வேண்டுமென்றே செய்யவில்லை என்றார் அவர்.
மாண்ட ஒவ்வோர் இளையரின் பெயரைச் சொல்லி அவர்களது குடும்பங்களிடம் அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
விபத்தால் ஏற்பட்ட பெரும் சுமை, சோகத்தைத் தாமும் சுமப்பதாக அவர் கூறினார்.

