நேப்பிடோ: மியன்மாரில் பலரைப் பலிவாங்கிய ஆகாயப் படைத் தாக்குதலை மேற்கொண்டதை அந்நாட்டு ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், அந்தத் தாக்குதல் பொதுமக்களைப் பலிவாங்கியிருந்தால் அவர்கள் பயங்கரவாதிகள் என்று வகைப்படுத்தப்பட்டோருக்கு உதவ கட்டாயப்படுத்தப்பட்டவர்களாக இருப்பர் என்றும் ராணுவம் கூறியது.
சாகாய்ங் எனும் பகுதியில் உள்ள பாஸிக்யி என்றழைக்கப்படும் கிராமத்தின்மீது மியன்மார் ராணுவம் நேற்று முன்தினம் மேற்கொண்ட ஆகாயப் படைத் தாக்குதலில் சிறுவர்கள் உட்பட குறைந்தது 50 பேர் மாண்டதாக சில ஊடகங்கள் தெரிவித்தன. சம்பவத்தை நேரில் கண்ட ஒருவரும் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தகவல் தெரிவித்தார்.
ஐக்கிய நாட்டு நிறுவனமும் மேற்கத்திய நாடுகளும் இந்தத் தாக்குதலுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்தனர்.
'என்யுஜி' எனப்படும் முன்னாள் ஆட்சியாளர்களைக் கொண்ட தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கக் குழு நடத்திய சந்திப்பைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. வட்டாரத்தில் மீண்டும் அமைதியையும் நிலைத்தன்மையையும் கொண்டுவரும் நோக்குடன் அந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மியன்மார் ராணுவ அரசாங்கத்தின் பேச்சாளர் ஸாவ் மின் துன் ராணுவத் தெலைக்காட்சி ஒன்றில் கூறினார்.
2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மியன்மார் ராணுவம் ஆட்சியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றியது, அன்றிலிருந்து அந்நாட்டில் குழப்பநிலை தொடர்கிறது.