விளையாட்டுத் துளிகள்

விளையாட்டுத் துளிகள்

1 mins read
8425f9c9-8ba7-4e81-b19b-a153294c04ce
-

பயர்னை ஊதித் தள்ளிய சிட்டி

மான்செஸ்டர்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் காலிறுதிச் சுற்றில் ஜெர்மனியின் பயர்ன் மியூனிக் குழுவை 3-0 எனும் கோல் கணக்கில் ஊதித் தள்ளியது இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிட்டி. வெல்வதற்கு மிகவும் சிரமமான குழுவாகக் கருதப்படும் பயர்னை, சிட்டி திக்குமுக்காடச் செய்தது.

ரோட்ரி, பெர்னாடோ சில்வா, நட்சத்திரம் எர்லிங் ஹாலண்ட் (படத்தில் வலது) ஆகியோர் சிட்டியின் கோல்களைப் போட்டனர்.

மற்றொரு காலிறுதியாட்டத்தில் இத்தாலியின் இன்டர் மிலான், போர்ச்சுகலின் பென்ஃபிக்காவை 2-0 எனும் கோல் கணக்கில் வென்றது.

காலிறுதிச் சுற்றில் குழுக்கள் ஒன்றுடன் ஒன்று இருமுறை மோதும்; மொத்த கோல் எண்ணிக்கையின் அடிப்படையில் வெற்றிக் குழு முடிவுசெய்யப்படும்.

தயரச் சம்பவத்துக்குப் பிறகு மீண்டும் மோதிய பர்சேபாயா, அரீமா

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் அரீமா எஃப்சி, பர்சேபாயா சுரபாயா ஆகிய குழுக்கள் மோதிய காற்பந்தாட்டம் கலவரத்தில் முடிந்தது; 135 பேர் மாண்டனர்.

இந்நிலையில் அவ்விரு குழுக்களும் மீண்டும் சந்தித்தன. இம்முறை விளையாட்டரங்கிற்குள் ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

ஆட்டம், இந்தோனீசியாவின் தேசிய காவல்துறைப் படையின் தலைமையகத்துக்கு அருகே உள்ள விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. விளையாட்டாளர்களைத் தவிர செய்தியாளர்கள், குழு அதிகாரிகள், பாதுகாவல் அதிகாரிகள் ஆகியோர் மட்டும் விளையாட்டரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர்.