வாஷிங்டன்: அமெரிக்காவின் ரகசிய உளவுத்துறை ஆவணங்களை அண்மையில் இணையத்தில் வெளியிட்டவர் 20 வயதுகளில் உள்ள ஓர் இளையர் என்றும் அவர் ஒரு துப்பாக்கிப் பிரியர் என்றும் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் தெரிவித்துள்ளது.
இணையத் தொடர்புத் தகவல் தளமான 'டிஸ்கோர்ட்'டில் அமைக்கப்பட்டிருந்த குழுவின் உறுப்பினர்களிடமிருந்து இந்த விவரங்களைப் பெற்றதாக வாஷிங்டன் போஸ்ட் கூறியது. ரகசிய ஆவணங்களை வெளியிட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவரும் அக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவர்.
அவர் குழுவினருடன் ரகசிய உளவுத்துறை தகவல்களைப் பகிர்ந்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது. குழுவில் இருந்த சுமார் 24 ஆடவர்கள், இளம் ஆண்கள் ஆகிய அனைவரும் துப்பாக்கிகள், ராணுவப் பொருள்கள், கடவுள் ஆகியவற்றின் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துகொள்பவர்கள் என்றும் வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்தது. ஆடவரின் பெயர் வெளியிடப்படவில்லை.
அந்த 'டிஸ்கோர்ட்' குழுவின் இரண்டு உறுப்பினர்களுடன் நடத்திய நேர்காணல்களின் மூலம் விவரங்களைச் சேகரித்ததாக வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டது. விவரங்களைத் தங்களால் சரிபார்க்க முடியவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் சொன்னது. சட்ட ஒழுங்கு அதிகாரிகளுடன் தாங்கள் ஒத்துழைப்பதாக நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் 'டிஸ்கோர்ட்' கூறியது.
இதுகுறித்து தகவல் தெரிவிக்குமாறு அமெரிக்காவின் தற்காப்பு அமைச்சு, நீதித்துறை ஆகிய இரண்டிடமும் ராய்ட்டர்ஸ் கேட்டுக்கொண்டது. ஆகக் கடைசி நிலவரப்படி அவை கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கவில்லை.
'அமெரிக்க உளவுத்துறை ஆவணங்களை வெளியிட்டவர் 20 வயதுகளில் உள்ள இளையர்'

