கோலாலம்பூர்: மத்திய அரசும் மாநில அரசுகளும் சேர்ந்து செயல்படும் நேரம் வந்துவிட்டது என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் நலனை முன்னிட்டு எதிர்க்கட்சியான பெரிக்காத்தான் நேஷனலுடன் சேர்ந்து செயல்படவும் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
கிளந்தான் மாநில அரசாங்கத்தின் பாஸ் கட்சியுடனான அண்மைய சந்திப்பை அவர் உதாரணமாக சுட்டிக்காட்டினார்.
அப்போது அம்மாநில முதல்வர் அஹமட் யாக்கோப்பின் அக்கறைக்குரிய விவகாரங்களைக் கேட்டறிந்ததாக அன்வார் தெரிவித்தார்.
"நாளை திரங்கானுவுக்குச் சென்று அம்மாநில முதல்வரைச் சந்திக்கிறேன்," என்று நேற்று பள்ளிவாசல் ஒன்றின் கட்டுமானப் பணியைத் தொடங்கி வைத்து அவர் கூறினார்.
பொதுத் தேர்தலின்போது பக்கத்தான் ஹரப்பானும் பெரிக்காத்தான் நேஷனலும் எதிர்த்துப் போட்டியிட்டன. ஆனால் தற்போது மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு இடையிலான விரிசல் நீடிக்க வேண்டிய அவசியமில்லை என்றார் அவர்.

