ஜகார்த்தா: இந்தோனீசியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வரி விதிப்பது குறித்து அந்நாட்டின் அரசாங்கம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
சமூக ஊடகங்களில் வெளியான சர்ச்சைக்குரிய காணொளியைத் தொடர்ந்து வரி விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
கடல் விவகாரங்கள் மற்றும் முதலீடுகளுக்கான ஒருங் கிணைப்பு அமைச்சர் லுஹுட் பண்ட்ஜெய்டான், விரைவில் வரி விதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இதேபோல சுற்றுலா, புத்தாக்கப் பொருளியல் அமைச்சரான சான்டியாகா உனோ, வரி விதிக்கும் திட்டத்தை ஆராய்ந்து வருவ தாக கடந்த திங்கள்கிழமை தெரிவித்தார்.
"இது சரியான முடிவா, எந்த அளவுக்கு வரி விதிக்கலாம் என்பது பற்றி வருகிற வாரங்களில் பரிசீலிக்கப்படும். இதன் பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும்," என்றார் அவர்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான வரி நாட்டின் சுற்றுலாத் தலங்களையும் சந்தை களையும் மேம்படுத்த பயன்படுத்தப்படும் என்று இரு அமைச்சர்களும் கூறினர்.
சுற்றுச் சூழலைக் கட்டிக்காக்கவும் கூடுதல் வருமானம் பயன் படுத்தப்படும் என்று சான்டியாகா தெரிவித்தார். ஆனால் சுற்றுலாப் பயணிகளுக்கு வரி விதித்தால் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்றும் அத்துறையைச் சேர்ந்தவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தோனீசியாவின் குறு, சிறு, நடுத்தர நிறுவன சங்கத்தின் தலைமைச் செயலாளர் எடி மிசேரோ, இந்த விவகாரத்தை கவனத்துடன் பரிசீலிக்க வேண்டும் என்றார்.
"சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய இந்தோனீசியப் பயணத்தை ரத்து செய்து விடக் கூடாது, வரி விதிப்புக்கு நாங்கள் ஆட்சேபம் தெரிவிக்கிறோம்," என்று அவர் கூறினார்.
இந்தோனீசியாவின் ஹோட்டல் மற்றும் உணவகச் சங்கத்தின் தலைமைச் செயலாளர் ஆலன் யூஸ்ரான், இத்தகைய வரி விதிப்புக்கு இது ஏற்ற நேரமல்ல என்று குறிப்பிட்டார்.
"கொள்ளைநோயிலிருந்து நாடு இன்னமும் முழுமையாக மீண்டு வரவில்லை. இப்போது வரி விதித்தால் சுற்றுலாத் துறை பாதிக்கும்," என்று அவர் கூறினார்.
சமூக ஊடகங்களில் பரவிய காணொளி ஒன்றில் சட்டை, தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டிய வெளிநாட்டுப் பயணி ஒருவர், காவல் அதிகாரியுடன் காரசார மான வாக்குவாதத்தில் ஈடுபடு வதைக் காண முடிகிறது.
பணத்துக்காக தன் மீது குற்றம்சாட்டுவதாகக் கூறிய அந்தப் பயணி பணம் வேண்டுமா என கேட்கிறார். இதே தெருவில் தலைக்கவசம் இல்லாமல் பயணம் செய்யும் பாலி மக்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கேட்கிறார். இந்தக் காணொளி புதிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

