ஹனோய்: தங்களுக்கிடையிலான இருதரப்பு உறவை மேம்படுத்திக்கொள்ள விரும்புவதாக அமெரிக்காவும் வியட்னாமும் தெரிவித்துள்ளன.
சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதைத் தொடர்ந்து அதைச் சரிகட்டும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது. அந்த வகையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கனும் வியட்னாம் பிரதமர் ஃபாம் மின் சின்னும் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து பேசினர்.
திரு பிளிங்கன் வியட்னாமுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் முதல் அங்கமாக அவர் திரு சின்னைச் சந்தித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் இருநாட்டு உறவில் பெரும் முன்னேற்றம் இருந்துள்ளதாக சந்திப்புக்கு முன்பு திரு பிளிங்கன் கூறியிருந்தார்.
"உறவை மேலும் மேம்படுத்தி அதை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லமுடியும் என்ற நம்பிக்கை இப்போது எங்களுக்கு இருக்கிறது. அதன் வாயிலாக பொருளியல் ரீதியாக எங்களுக்கு இடையே இருக்கும் பங்காளித்துவத்தையும் மேலும் வலுப்படுத்தமுடியும்," என்று திரு பிளிங்கன் குறிப்பிட்டார். அமெரிக்காவுக்கும் வியட்னாமுக்கும் இடையே அதிகாரபூர்வ பங்காளித்துவ உறவு ஏற்பட்ட 10ஆம் ஆண்டு நிறைவையும் அவர் சுட்டினார். தென்கிழக்காசிய வட்டாரத்தில் வியட்னாம், அமெரிக்காவின் முக்கிய வர்த்தகப் பங்காளி நாடு.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் வியட்னாமின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் கையன் ஃபு ட்ரோங்கும் சென்ற மாதம் தொலைபேசிவழி உரையாடினர். அந்த உரையாடல் மிகவும் வெற்றிகரமாக அமைந்ததென திரு சின் சொன்னார்.
இருநாட்டு உறவின் முக்கிய அம்சங்களில் தற்காப்பு அடங்கும் என்று திரு பிளிங்கன் கூறினார்.

