பெய்ஜிங்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அன்டனி பிளிங்கன் வருகை தருவதற்கு சீனா அனுமதி வழங்க மறுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட வேவு பலூன் குறித்த விசாரணையின் முடிவுகளை மத்திய புலனாய்வுப் பிரிவு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் தொடர்பில் கவலை கொண்டுள்ள சீனா திரு பிளிங்கனின் வருகையைத் தடுப்பதாக ஃபைனேன்ஷியல் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது.பல்வேறு தகவல்களைக் கொண்டு இந்த விவரம் தெரியவந்துள்ளதாக அது குறிப்பிட்டது.
சீனாவுக்குத் தாம் மேற்கொள்ளவிருந்த பயணத்தை திரு பிளிங்கன் கடந்த பிப்ரவரி மாதம் ரத்து செய்தார். அவரின் வருகையை வேறு தேதிக்கு ஒத்திவைக்க தான் தயாராய் இல்லை என்று சீனா, அமெரிக்காவிடம் கூறியதாகச் சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, சீனாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா முயற்சி செய்து வருவதாகவும் அதற்கு சீனா உடன்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அழைப்புகளுக்கு சீனா பதிலளிப்பதில்லை என்று அமெரிக்காவின் மூத்த அரசதந்திர அதிகாரியான டெரெக் சொலெட் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

