துபாய்: ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் ஆகப் பெரிய நகரான துபாயில் குடியிருப்புக் கட்டடம் ஒன்றில் தீ மூண்டது; குறைந்தது 16 பேர் மாண்டதாகவும் ஒன்பது பேர் காயமுற்றதாகவும் அரசாங்கம் தெரிவித்தது. அல்-ராஸ் குடியிருப்பு வட்டாரத்தில் உள்ள ஐந்து மாடிக் கட்டடத்தில் நேற்று முன்தினம் பிற்பகலில் தீ மூண்டது. அல்-ராஸ், பல வெளிநாட்டு ஊழியர்களும் வர்த்தகர்களும் வசிக்கும் துபாயின் ஆகப் பழைமையான பகுதிகளில் ஒன்று.
பாதுகாப்பு விதிமுறைகள் சரியாகக் கடைப்பிடிக்கப்படாததால் தீ மூண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததென துபாய் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்ததென்று அரசாங்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
தகவல் வந்து ஆறு நிமிடங்களுக்குள் தீயணைப்பு அதிகாரிகள் தீயை அணைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
துபாயின் மக்கள்தொகை 3.3 மில்லியன். அவர்களில் 90 விழுக்காட்டினர் வெளிநாட்டவர். ஆகக் கடைசி நிலவரப்படி இச்சம்பவத்தில் மாண்டோர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிவிக்கப்படவில்லை.
இந்நகரில் முன்னதாக பல தீச்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், மரண எண்ணிக்கை அதிகம் பதிவானதில்லை.

