தொடர்கிறது ஹாலண்டின் வேட்டை
மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டிக்கு கோல் மழையைத் தொடர்ந்து பொழியச் செய்கிறார் நட்சத்திர தாக்குதல் ஆட்டக்காரர் எர்லிங் ஹாலண்ட் (படம்).
ஒரு பிரிமியர் லீக் பருவத்தில் ஆக அதிக கோல்களைப் போட்டிருந்தவர் லிவர்பூலின் மோ சாலா. இப்போது அதே அளவு கோல்களைப் போட்டுள்ளார் ஹாலண்ட்.
இந்த பிரிமியர் லீக் பருவம் முடிய சிட்டிக்கு இன்னும் எட்டு ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் சாலாவின் சாதனையைத் தவிடுபொடியாக்கும் விளிம்பில் இருக்கிறார் இவர்.
லெஸ்டர் சிட்டியை 3-1 எனும் கோல் கணக்கில் வென்றது சிட்டி. சிட்டியின் மூன்று கோல்களில் இரண்டைப் போட்டார் ஹாலண்ட்.
ஸ்பர்சுக்குப் பேரதிர்ச்சி
லண்டன்: டோட்டன்ஹம் ஹாட்ஸ்பருக்கு எதிரான இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் எதிர்பாரா விதமாக 3-2 எனும் கோல் கணக்கில் வெற்றிகண்டுள்ளது போர்ன்மத்.
ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் ஸ்பர்சை முன்னுக்கு அனுப்பினார் தென்கொரிய நட்சத்திரம் சொன் ஹியோங் மின். 38வது நிமிடத்தில் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார் போர்ன்மத்தின் மாத்தியாஸ் வீனா.
51வது நிமிடத்தில் போர்ன்மத்தை முன்னுக்கு அனுப்பினார் டோமினிக் சொலாங்கி. ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் கோல் எண்ணிக்கையை 2-2 என்று ஆக்கினார் ஸ்பர்சின் அர்னாவ்ட் டான்ஜூமா.
ஒருவழியாக தோல்வியைத் தவிர்த்துவிட்டோம் என்று ஸ்பர்ஸ் பெருமூச்சு விடுவதற்குள் ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் வெற்றி கோலைப் போட்டார் டான்கோ ஊவட்டாரா. இந்த லீக் பருவத்தில் தொடர்ந்து சிறப்பாக ஆட ஸ்பர்ஸ் சிரமப்பட்டு வருகிறது.
செல்சிக்குத் தொடர் துயரம்
லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான செல்சிக்கு விடிவுகாலம் பிறக்காமல் போகிறது. பிரிமியர் லீக்கில் பிரைட்டனுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் முன்னுக்குச் சென்ற பிறகும் 2-1 எனும் கோல் கணக்கில் தோல்வியடைந்தது செல்சி.
ஆட்டத்தில் பிரைட்டன் அபாரமாக ஆடி வென்றது. கோல் மழை பொழியும் என்ற உணர்வும் இருந்தது.
உலகக் காற்பந்தில் மாபெரும் குழுக்களில் ஒன்றாகக் கருதப்படும் செல்சி இந்தப் பருவத்தில் ரசிகர்களுக்குப் பெரிய அளவில் ஏமாற்றத்தைத் தந்துள்ளது. பிரிமியர் லீக்கில் முதல் 10 இடங்களுக்குள் முடிப்பதே சந்தேகமாக இருந்து வருகிறது செல்சிக்கு.

