கியவ்: உக்ரேன் போரில் ரஷ்யா பயன்படுத்தும் ஆயுதங்களில் சீனாவில் உற்பத்தியாகும் பாகங்கள் அதிகம் இருந்து வருவதை உக்ரேனியப் படைகள் அறிகின்றன. உக்ரேன் அதிபர் வொலொடமிர் ஸெலென்ஸ்கியின் அலுவலகத்தில் மூத்த ஆலோசகராகப் பணியாற்றும் விலாடிஸ்லாவ் விலாசியுக் இத்தகவலை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
ரஷ்யாமீது மேற்கத்திய நாடுகள் பல தடை உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன. அவற்றிலிருந்து ரஷ்யாவுக்குப் பொருள்கள் இறக்குமதியாவதில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதால் இந்நிலை உருவாகியுள்ளது.
"இப்போது ரஷ்ய ஆயுதங்களில் மேற்கத்திய நாடுகளில் செய்யப்பட்ட பாகங்கள் குறைவாக காணப்படுகிறது; கூடுதலானவை சீனாவில் உற்பத்தியானவை. இதைக் கணிப்பது சுலபம்," என்று திரு விலாசியுக் சொன்னார்.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், சீன தற்காப்பு அமைச்சர் லி ஷாங்ஃபுவை நேற்று முன்தினம் மாஸ்கோவில் சந்தித்தார். பொருளியல், அரசியல், ராணுவ ரீதியாக தங்களுக்கிடையிலான உறவை வலுப்படுத்தும் முயற்சியில் இரு நாடுகளும் இறங்கியுள்ளன.

