பெய்ஜிங்: வடகொரியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வதற்கான முயற்சிகளை சீன அதிபர் ஸி ஜின்பிங் எடுக்கப்போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரிய அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகம் இத்தகவலை வெளியிட்டது.
அண்மைக் காலமாக வடகொரியா பல்வேறு அணுவாயுதச் சோதனைகளை மேற்கொண்டு வந்துள்ளது. ஜி7 கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் அந்நடவடிக்கைக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில் இத்தகவல் வெளியானது. சீனா, நீண்டகாலமாக வடகொரியாவின் ஒப்பந்தப் பங்காளி நாடாக இருந்து வருகிறது. அதோடு, பொருளியல் ரீதியாக வடகொரியா, சீனாவினால் ஆக அதிகம் பலனடையும் நாடுகளில் ஒன்று.
கொரியப் போரில் அமெரிக்காவின் தலைமையில் சண்டையிட்ட ஐக்கிய நாட்டு நிறுவனப் படைகளை எதிர்த்துப் போரிட திரு மாவ் ஸிதோங் மில்லியன் கணக்கானோரை அனுப்பிவைத்தார். அப்போதுதான் சீனாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான உறவு பிறந்தது.
இருநாடுகளும் உதடும் பற்களும்போல் நெருக்கமானவை என்று சீனாவின் முன்னாள் தலைவரான திரு மாவ் ஒரு காலத்தில் கூறியிருந்தார்.
கடந்த சில ஆண்டுகளாக சீனாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான உறவு சற்று நிலையற்று காணப்பட்டது. எனினும், அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன; அதனால் தங்களுக்கிடையே உறவை வலுப்படுத்திக்கொள்ளும் எண்ணம் சீனாவுக்கும் வடகொரியாவுக்கும் எழுந்துள்ளது.
"மாறியிருக்கும் அனைத்துலக நிலவரத்தால் எழுந்த சவால்களைப் பல காலமாக சீனாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான நட்பு வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளது," என்று வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுக்குத் திரு ஸி தகவல் அனுப்பியிருந்தார்.
"இருதரப்புக்கும் இடையிலான நட்பையும் ஒத்துழைப்பையும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல நான் தொடர்ந்து முயற்சி செய்வேன்," என்று திரு ஸி கூறி இருந்ததை வடகொரியாவின் கேசிஎன்ஏ ஊடகம் தெரிவித்தது.

