விளையாட்டுத் துளிகள்

விளையாட்டுத் துளிகள்

2 mins read
5a0d44d4-c560-4877-9ace-fb746eced73e
-

அர்ஜென்டினாவில் 'யு-20' உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி

பியூனஸ் அய்ரஸ்: அடுத்த மாதம் நடைபெறவுள்ள 20 வயதுக்கு உட்பட்டோருக்கான காற்பந்து உலகக் கிண்ணப் போட்டியை அர்ஜென்டினா ஏற்று நடத்தவுள்ளது. இப்போட்டி அடுத்த மாதம் 20ஆம் தேதியிலிருந்து ஜூன் மாதம் 11ஆம் தேதிவரை நடைபெறும்.

போட்டியை ஏற்று நடத்தும் பொறுப்பு முதலில் இந்தோனீசியாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. எனினும், போட்டியில் இஸ்ரேல் அணி பங்கேற்பதற்கு இந்தோனீசியாவில் எதிர்ப்பு இருந்ததைத் தொடர்ந்து அதனிடமிருந்து பொறுப்பு பறிக்கப்பட்டது.

லீட்சை துவைத்தெடுத்த லிவர்பூல்

லீட்ஸ்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் லீட்ஸ் யுனைடெட்டை 6-1 எனும் கோல் கணக்கில் வென்றது லிவர்பூல். அண்மைக் காலமாகப் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுவந்த லிவர்பூல் இந்த ஆட்டத்தில் புத்துயிருடன் ஆடியது.

லிவர்பூலின் மோ சாலா, டியோகோ ஜோட்டா இருவரும் ஆளுக்கு இரண்டு கோல்களைப் போட்டனர். கிட்டத்தட்ட ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு லிவர்பூலுக்கு கோல் போட்டார் ஜோட்டா.

விறுவிறுப்பான ஆட்டத்தில் 'சிஎஸ்கே' வெற்றி

பெங்களூரூ: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி), ஐபிஎல் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைப்பதைத் தடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே).

ஆட்டத்தில் ஆர்சிபியின் வெற்றி இலக்கு 227ஆக இருந்தது. அதை அடையும் விளிம்பிற்கு அக்குழு வந்தது. ஐபிஎல் வரலாற்றில் அவ்வளவு பெரிய வெற்றி இலக்கை இதுவரை எந்தக் குழுவும் அடைந்ததில்லை.

முதலில் பந்தடித்த சிஎஸ்கே ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 226 ஓட்டங்களைக் குவித்தது. ஆர்சிபி எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ஓட்டங்களை எடுத்தது.