பெய்ஜிங்: சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தீ மூண்டதால் குறைந்தது 29 பேர் மாண்டனர்.
உயிரிழந்தோரில் பெரும்பாலோர் நோயாளிகள்.
இச்சம்பவத்தின் தொடர்பில் 12 பேரை காவல்துறையினர் தடுத்து வைத்துள்ளனர்.
'சாங்ஃபெங்' எனும் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமையன்று (18 ஏப்ரல்) உள்ளூர் நேரப்படி பிற்பகல் ஒரு மணிக்குத் தீ மூண்டது.
புதுப்பிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பகுதியில் சாயத்தில் தீப்பொறி பட்டதால் தீ மூண்டதென முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
புதன்கிழமையன்று (19 ஏப்ரல்) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அதிகாரிகள் இதைத் தெரிவித்தனர்.
புதுப்பிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தின் தலைவர், மருத்துவமனையின் இயக்குநர், துணை இயக்குநர் உள்ளிட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் இருந்த நோயாளிகளில் பெரும்பாலோர் வயதானவர்கள் என்றும் அவர்களில் சிலர் கை, கால்களை அகற்றும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டவர்கள் என்றும் சில தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

