கோலாலம்பூர்: நூற்றுக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்கள் கடப்பிதிழ் இல்லாமலும் வேலை இல்லாமலும் தெற்காசியாவிலிருந்து மலேசியாவுக்கு எவ்வாறு நுழைந்தனர் என்பதை கண்டறிய மலேசியா விசாரணை நடத்துகிறது.
மலேசியாவில் வேலை செய்ய பெரும் அளவிலான தொகையைச் செலுத்தியும் இந்த ஊழியர்களுக்கு இப்படிப்பட்ட அவலநிலை ஏற்பட்டுள்ளதாக மலேசிய அதிகாரிகளும் வெளிநாட்டு ஊழியர்கள் உரிமை அமைப்பினரும் தெரிவித்துள்ளனர். மலேசியாவில் வெளிநாட்டு ஊழியர்கள் துன்புறுத்தப்படுவதாக அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன.
மலேசியாவில் வெளிநாட்டு ஊழியர்கள் துன்புறுத்தப்படுவது, ஏமாற்றப்படுவது குறித்து அண்மைய ஆண்டுகளாகப் பல புகார்கள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து பங்ளாதேஷ், நேப்பாளம் ஆகிய நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான ஊழியர்கள் மலேசியா வந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு வேலை வாங்கித் தருவதாக வாக்களித்த முகவர்களிடம் 20,000 ரிங்கிட் (S$6,000) செலுத்தியதாகத ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் வெளிநாட்டு ஊழியர்கள் உரிமை அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
பணத்தைப் புரட்ட பலர் கடன் வாங்கியதாக அறியப்படுகிறது. ஆனால் மலேசியாவில் வேலை கிடைக்காததால் கடனை அடைக்க முடியாமல் அவர்கள் திண்டாடுகின்றனர்.
அதுமட்டுமல்லாது, அவர்கள் மலேசியா வந்தடைந்ததும் அந்த முகவர்கள் அவர்களது கடப்பிதிழ்களை அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட இந்த வெளிநாட்டு ஊழியர்கள் கொத்தடிமைகளாக மாறும் அபாயம் அதிகம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதாக மலேசிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் அதுதொடர்பான விவரங்களை வெளியிட அது மறுத்துவிட்டது.

