பேங்காக்: தாய்லாந்தில் இவ்வாண்டு தொடங்கியதிலிருந்து ஏற்பட்டுள்ள காற்று மாசு காரணமாக ஏறத்தாழ 2.4 மில்லியன் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
அவர்களுக்கு காற்று மாசு தொடர்பாக ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
காற்று மாசடைந்திருப்பதால் தாய்லாந்தின் பல பகுதிகளில் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
நேற்று காலை நிலவரப்படி உலகிலேயே காற்று மாசு காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நகரங்களில் தாய்லாந்து தலைநகர் பேங்காக்கும் தாய்லாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள சியாங் மாய் நகரமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தாய்லாந்தில் இவ்வாரம் மட்டும் காற்று மாசு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு 184,465 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அந்நாட்டின் பொதுச் சுகாதாரத் துறை தெரிவித்தது.
பாதிக்கப்பட்டோரில் பலருக்கு சுவாசப் பிரச்சினைகள், தோல் தொடர்பான பிரச்சினைகள், கண் அழற்சி, தொண்டை வலி போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

