பயர்னை வீழ்த்தி அரையிறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்ற சிட்டி
மியூனிக்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்துக்கு இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிட்டி தகுதி பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற காலிறுதிச் சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் சிட்டியும் ஜெர்மனியின் பயர்ன் மியூனிக்கும் தரப்புக்கு ஒரு கோல் போட்டு சமநிலை கண்டன.
ஆனால் காலிறுதிச் சுற்றின் முதல் ஆட்டத்தில் பயர்னை 3-0 எனும் கோல் கணக்கில் சிட்டி வீழ்த்தியது. இதனால் ஒட்டுமொத்த கோல் அடிப்படையில் 4-1 என சிட்டி வாகை சூடி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
அரையிறுதி ஆட்டத்தில் ரியால் மட்ரிட் குழுவுக்கு எதிராக சிட்டி களமிறங்குகிறது.
இந்நிலையில், இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டத்துக்கும் சிட்டி குறிவைத்துள்ளது. லீக் பட்டியலில் அது தற்போது இரண்டாவது நிலையில் உள்ளது.
74 புள்ளிகள் பெற்று லீக் பட்டியலில் ஆர்சனல் முன்னிலை வகிக்கிறது. 70 புள்ளிகளுடன் சிட்டி இரண்டாவது நிலையில் உள்ளது. ஆனால் ஆர்சனலைவிட அது ஓர் ஆட்டம் குறைவாக விளையாடி உள்ளது.
இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் ஷெஃபீல்ட் யுனைடெட்டுக்கு எதிராக சிட்டி நாளை களமிறங்குகிறது. போதிய ஓய்வின்றி, தமது ஆட்டக்காரர்கள் களைப்புடன் இருப்பதால் ஷெஃபீல்ட் யுனைடெட்டுக்கு எதிரான ஆட்டத்தில் தமது ஆட்டக்காரர்கள் எவ்வாறு செயல்படுவர் எனத் தெரியவில்லை என்று சிட்டியின் நிர்வாகி பெப் கார்டியோலா கவலை தெரிவித்துள்ளார்.
அரையிறுதியில் மோதும் இத்தாலிய ஜாம்பவான்கள்
மிலான்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்திற்கு இத்தாலியின் இன்டர் மிலான் தகுதி பெற்றுள்ளது. காலிறுதிச் சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் மிலானும் போர்ச்சுகலின் பென்ஃபிகாவும் தரப்புக்கு மூன்று கோல்கள் போட்டு சமநிலை கண்டன. ஆனால் காலிறுதிச் சுற்றின் முதல் ஆட்டத்தில் இன்டர் 2-0 எனும் கோல் கணக்கில் வென்றது.
இதன் விளைவாக ஒட்டுமொத்த கோல் அடிப்படையில் 5-3 எனும் கோல் கணக்கில் இன்டர் வெற்றி பெற்றது.
அரையிறுதிச் சுற்றில் இத்தாலியின் மற்றொரு பலம் பொருந்திய குழுவான ஏசி மிலானை இன்டர் சந்திக்கிறது. எனவே, இப்பருவத்துக்கான சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இத்தாலியைச் சேர்ந்த குழு ஒன்று இடம்பெறுவது உறுதி.
கடந்த ஆறு ஆண்டுகளாக இத்தாலியைச் சேர்ந்த குழு ஏதும் சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

