விபத்துக்குள்ளான கிராப் ஓட்டுநரின் வேலையைச் செய்த காவல்துறை அதிகாரி

விபத்துக்குள்ளான கிராப் ஓட்டுநரின் வேலையைச் செய்த காவல்துறை அதிகாரி

1 mins read
e2084df2-a158-46a2-9cfb-49f0569a3382
நற்செயலைப் புரிந்த காவல்துறை அதிகாரி கிரிட்சானாச்சி சிச்சாரொவென். படம்: தான்யா தன்யாசிரி, ஃபேஸ்புக் -

பேங்காக்: தாய்லாந்தில் விபத்துக்கு ஆளான கிராப் ஓட்டுநரின் வேலையைச் செய்திருக்கிறார் காவல்துறை அதிகாரி ஒருவர்.

தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் 45 வயது கிராப் ஓட்டுநர் ஒருவர் வாடிக்கையாளர் வாங்கிய உணவை உணவகத்திலிருந்து எடுத்துச் செல்லும்போது மயங்கிப்போனார்.

அதைத் தொடர்ந்து அவரின் மோட்டார்சைக்கிள் விபத்துக்கு உள்ளானது.

கிராப் ஓட்டுநருக்குக் காயங்கள் ஏற்பட்டன.

மோட்டார்சைக்கிளில் அவருடன் இருந்த 14 வயது மகள் காயமின்றி உயிர் தப்பினார்.

இருவரின் பெயர்களும் வெளியிடப்படவில்லை.

இந்த விவகாரத்தைக் கையாண்ட கிரிட்சானாச்சி சிச்சாரொவென் எனும் காவல்துறை அதிகாரி கிராப் ஓட்டுநர் ஒப்படைக்கவேண்டிய உணவை வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்த்தார்.

விபத்தால் வருமானம் போய்விடும் என்ற அச்சம் ஓட்டுநரின் மகளுக்கு இருந்திருக்கிறது.

தந்தையுடன் மருத்துவமனைக்குச் செல்லுமாறு அவரிடம் கூறிய திரு கிரிட்சானாச்சி தானே உணவை விநியோகித்திருக்கிறார்.

உணவை வாடிக்கையாளரிடம் ஒப்படைத்த பிறகு கிராப் ஓட்டுநர் உணவு விநியோகத்திற்குப் பயன்படுத்தும் பையைத் திரு கிரிட்சானாச்சி மருத்துவமனையின் பாதுகாவல் அதிகாரியிடம் கொடுத்திருக்கிறார்.

அவரின் இச்செயலுக்கு தாய்லாந்தில் பலர் இணையம்வழி பாராட்டி வருகின்றனர்.