தவறுதலாக சொந்த நகரைத் தாக்கிய ரஷ்ய போர் விமானம்

தவறுதலாக சொந்த நகரைத் தாக்கிய ரஷ்ய போர் விமானம்

21 Apr 2023 - 7:10 pm

1 mins read

மாஸ்கோ: ரஷ்ய போர் விமானம் ஒன்று தவறுதலாக சொந்த நகரமான பெல்கொரோட்டில் தாக்குதல் நடத்தியிருக்கிறது.

இந்நகரம் உக்ரேனுக்கு மிக அருகில் உள்ளது.

வியாழக்கிழமையன்று (20 ஏப்ரல்) நிகழ்ந்த தாக்குதல் காரணமாக மிகப் பெரிய வெடிப்பு ஏற்பட்டு மூன்று பேர் காயம் அடைந்தனர்.

போர் விமானத் தாக்குதல் காரணமாக பல வாகனங்கள் சேதமடைந்தன.

கட்டடம் ஒன்று சேதமடைந்து அதில் இருந்த சன்னல்கள் சுக்குநூறாக உடைந்தன.

சாலையில் பல கான்கிரீட்டுகள் சிதறிக் கிடந்தன.

கடை ஒன்றின் கூரைமீது கார் ஒன்று கவிழந்து கிடந்ததை காணொளிகள் காட்டின.

பெல்கொரோட் நகரில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது.

தாக்குதல் காரணமாக பிரதான சாலை ஒன்றின் குறுக்கே 20 மீட்டர் நீளமுள்ள பள்ளம் ஏற்பட்டுள்ளதாக பெல்கொரோட் நகரின் ஆளுநர் வியாசெஸ்லாவ் கிளாட்கோவ் தெரிவித்தார்.

போர் விமானம் தவறுதலாக தாக்குதல் நடத்தியதாக ரஷ்யத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

ஆனால் எத்தகைய ஆயுதம் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து அது தகவல் வெளியிடவில்லை.