மாஸ்கோ: ரஷ்யப் போர் விமானம் ஒன்று தவறுதலாக சொந்த நகரமான பெல்கொரோட்டில் தாக்குதல் நடத்தியது. இந்த நகரம் உக்ரேனுக்கு மிக அருகில் உள்ளது. தாக்குதல் காரணமாக மிகப் பெரிய வெடிப்பு ஏற்பட்டு மூன்று பேர் காயம் அடைந்தனர்.
போர் விமானம் நடத்திய தாக்குதல் காரணமாக பல வாகனங்கள் சேதமடைந்தன. கட்டடம் ஒன்று சேதமடைந்து அதில் இருந்த சன்னல்கள் சுக்குநூறாக உடைந்தன. சாலையில் பல கான்கிரீட்டுகள் சிதறிக் கிடந்தன.
கடை ஒன்றின் கூரை மீது கார் ஒன்று கவிழ்ந்து கிடந்ததைக் காணொளிகள் காட்டின.
பெல்கொரோட் நகரில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது. தாக்குதல் காரணமாக பிரதான சாலை ஒன்றின் குறுக்கே 20 மீட்டர் அளவுக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளதாக பெல்கொரோட் நகரின் ஆளுநர் வியாசெஸ்லாவ் கிளாட்கோவ் தெரிவித்தார்.
தாக்குதல் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று அவர் கூறினார். பாதிக்கப்பட்ட கட்டடத்தின் குடியிருப்பாளர்கள் இரவோடு இரவாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக அவர் கூறினார்.
போர் விமானம் தவறுதலாக தாக்குதல் நடத்தியதாக ரஷ்யத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது. ஆனால் எத்தகைய ஆயுதம் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து அது தகவல் வெளியிடவில்லை.
ரஷ்யப் போர் விமானம் சொந்த மண்ணில் தவறுதலாக நடத்திய தாக்குதலின் காரணமாக சேதமடைந்த கட்டடம். படம்: இபிஏ

