பெய்ஜிங்: மக்கள்தொகையில் இந்தியா, சீனாவை விரைவில் மிஞ்சிவிடும் என்ற செய்தி அண்மையில் வெளியானது. அதன் தொடர்பில் சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான 'சிசிடிவி' ஊடகம் மேற்கத்திய ஊடகங்களை சாடியுள்ளது.
மேற்கத்திய ஊடகங்கள் சீனாவின் வளர்ச்சியை வேண்டுமென்றே கருத்தில்கொள்ளாமல் மக்கள்தொகையில் இந்தியா அந்நாட்டைப் பின்னுக்குத் தள்ளுவதை எடுத்துரைப்பதாக 'சிசிடிவி' கண்டனம் தெரிவித்தது.
"அவை (மேற்கத்திய ஊடகங்கள்) சீனாவைத் தொடர்்ந்து இழிவுபடுத்தின. இருந்தாலும் சீனா தொடர்ந்து வளர்ச்சி கண்டுள்ளது. இன்ப அதிர்ச்சி தரும் வகையில் மிகப் பெரிய மக்கள்தொகையைக் கொண்டு நீடித்திருக்கக்கூடிய நிலையான பொருளியல் வளர்ச்சியை சீனா கண்டுள்ளது," என்று சிசிடிவி சொன்னது.
இவ்வாண்டின் நடுப்பகுதிக்குள் உலகின் ஆக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று அண்மையில் தெரிவிக்கப்பட்டது. அப்போது சீனாவில் இருப்பதைவிட இந்தியாவில் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் மக்கள் அதிகமாக இருப்பர் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமையன்று ஐக்கிய நாட்டு நிறுவனம் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் இத்தகவல் தெரியவந்தது.
"மனித குலம் வளர்ச்சியடைந்த விதத்தை வைத்துப் பார்க்கும்போது பிறப்பு விகிதம் விழுவதும் குழந்தை பெற்றுக்கொள்ளத் தயாராய் இருப்போரின் எண்ணிக்கை குறைவதும் ஒட்டுமொத்த உலகமே எதிர்நோக்கும் பிரச்சினைகளாகும்," என்று 'சிசிடிவி' கூறியது. ஊழியர் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளை வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகள் எதிர்நோக்குவதாகவும் அது குறைகூறியது.
60 ஆண்டுகளில் முதன்முறையாக சென்ற ஆண்டு சீனாவின் மக்கள்தொகை குறைந்தது.

