கார்ட்டூம்: மோதல்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் வாழும் வெளிநாட்டவரை அந்நாட்டிலிருந்து வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அரசதந்திர அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆகாயம்வழி வெளியேற்றப்படுவர் என்று சூடான் ராணுவம் கூறியுள்ளது.
ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரம் இடம்பெற்றதென பிபிசி ஊடகம் தெரிவித்தது. வெளிநாட்டவரை வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒத்துழைக்கப்போவதாக சூடான் ராணுவத் தலைவர் ஃபாட்டா அல்-பர்ஹான் சொன்னார் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
சூடானில் ஆட்சிக்காக அந்நாட்டு ராணுவமும் 'ஆர்எஸ்எஃப்' எனும் துணை ராணுவப் படைகளும் மோதலில் ஈடுபட்டுள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நாடு முழுவதும் பொதுமக்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் மாண்டுவிட்டனர்.
வெளிநாட்டவரை சூடானிலிருந்து வெளியேற்ற முன்னதாக வரையப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. பாதுகாப்பு தொடர்பான அச்சங்கள் இருந்தது அதற்குக் காரணம்.
தொடரும் மோதல்களால் சூடான் தலைநகர் கார்ட்டூமின் அனைத்துலக விமான நிலையம் மூடப்பட்டிருக்கிறது.
சூடானில் இருக்கும் பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் தங்களின் குடிமக்களை அந்நாட்டிலிருந்து வெளியேற்ற முடியாமல் தவித்தன.

