முக அடையாள தொழில்நுட்ப முறையில் இயங்கும் துப்பாக்கி
புரூம்ஃபீல்ட்: முக அடையாள முறையில் இயங்கும் அறிவார்ந்த துப்பாக்கி (படம்) உருவாக்கப்பட்டுள்ளது. இதை வாங்குவதற்கான விண்ணப்பங்களை அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் இயங்கும் 'பையோஃபையர் டெக்' எனும் நிறுவனம் பெற்று வருகிறது.
முக அடையாள முறை இருப்பதால் அங்கீகரிக்கப்பட்டோர் மட்டுமே இந்தத் துப்பாக்கியைப் பயன்படுத்தமுடியும். இந்தப் பாதுகாப்பு அம்சத்தைக் கொண்ட துப்பாக்கிகள் அண்மைக் காலமாக உருவாக்கப்பட்டு வருகின்றன.
இதன் 'புரோட்டோடைப்' எனப்படும் ஆரம்பக்கட்ட மாதிரி வடிவம், சென்ற வாரம் நடத்தப்பட்ட சோதனையில் சரியாக இயங்காமல் போனது. அந்த சோதனை, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் பார்வைக்காக மேற்கொள்ளப்பட்டது.
இதுபோன்ற அறிவார்ந்த துப்பாக்கிகளை உருவாக்குவதில் இருந்த பெரும் சவால்களை அந்நிகழ்வு எடுத்துக்காட்டியதாகக் கூறப்படுகிறது.
மாபெரும் கட்டடத்துக்கான பணிகளை நிறுத்திய கூகல்
சான் ஃபிரான்சிஸ்கோ: அமெரிக்காவின் சான் ஹோசே நகரில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான 'சிலிக்கான் வேலி' வட்டாரத்தில் தனது மாபெரும் கட்டடத்துக்கான பணிகளை கூகல் நிறுத்தியுள்ளது. அல்ஃபாபெட் நிறுவனத்துக்குச் சொந்தமான கூகல் அண்மைக் காலமாக செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் வேளையில் புதிய கட்டடத்துக்கானப் பணிகள் நிறுத்தகப்பட்டிருப்பதாக சிஎன்பிசி செய்தி நிறுவனம் தெரிவித்தது.
கட்டுமானப் பணிகளை இவ்வாண்டு இறுதியில் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அலுவலகங்கள், வீடுகள், பூங்காக்கள் ஆகியவை புதிய கட்டடத்திலும் அதன் வளாகத்திலும் இடம்பெறவிருந்ததாக சிஎன்பிசி குறிப்பிட்டது.
உலகளவில் தனது நிறுவனத்தில் வேலை செய்யும் சுமார் 12,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யப்போவதாக அல்ஃபாபெட் இவ்வாண்டு தொடக்கத்தில் அறிவித்திருந்தது. பொருளியல் ரீதியான சவால்களால் ஆட்குறைப்பு செய்யவேண்டிய சூழல் எழுந்ததாக அல்ஃபாபெட் கூறியது.
சென்ற ஆண்டின் கடைசி காலாண்டில் அந்நிறுவனத்தின் வருமானமும் லாபமும் எதிர்பார்த்ததைவிடக் குறைவாகப் பதிவாயின.
உலகின் பல பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளன. பொருளியல் மந்தமடைவதற்கான வாய்ப்புகள் இருப்பதை எதிர்பார்க்காமல் அவற்றில் பல அளவுக்கதிகமாகச் செலவு செய்ததாக கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
தாய்லாந்தில் கடும் வெப்பம்; பல மாநிலங்களுக்கு எச்சரிக்கை
பேங்காக்: கடும் வெப்பம் தாக்கக்கூடும் என்று தாய்லாந்தின் பல மாநிலங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தலைநகர் பேங்காக்கும் அவற்றில் அடங்கும். பேங்காக்கின் பாக்னா வட்டாரத்தில் வெப்பநிலை 42 டிகிரி செல்சியசைத் தொட்டது. 'ஹீட் இண்டெக்ஸ்' குறியீட்டின்படி அங்கு வெப்பநிலை வரலாறு காணாத அளவில் 54 டிகிரி செல்சியசாகப் பதிவானது.
காற்றின் ஈரத்தன்மை போன்ற அம்சங்களைக் கருத்தில்கொண்டு 'ஹீட் இண்டெக்ஸ்' வெப்பநிலைக் குறியீடு கணக்கிடப்படுகிறது. தாய்லாந்தின் வானிலை பிரிவு இந்தப் புள்ளிவிவரங்களை வெளியிட்டது.
வெப்பத் தாக்கத்துக்கு ஆளாகும் அபாயம் இருப்பதை அதிகாரிகள் பொதுமக்களுக்குச் சுட்டினர். கூடுமானவரை வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இம்மாதம் ஆசியாவின் சில பகுதிகள் அளவுக்கதிகமான வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. சில நாடுகளில் வரலாறு காணாத அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

