பெப் கார்டியாலோ பெருமிதம்
லண்டன்: சனிக்கிழமை இரவு நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் காற்பந்து ஆட்டத்தில் ஷெஃபீல்ட் யுனைடெட்டை 3-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி வீழ்த்தியது. இந்த வெற்றியால் தாம் மகிழ்ச்சியும் மனநிறைவும் அடை வதாக சிட்டி நிர்வாகி பெப் கார்டியாலோ தெரிவித்து உள்ளார். முன்னதாக, புதன்கிழமை பயர்ன் மியூனிக்குடன் மோதிய ஆட்டத்தில் சிட்டி வெற்றி தோல்வி இன்றி ஆட்டத்தை முடித்ததைத் தொடர்ந்து அணியில் கார்டியாலோ மூன்று மாற்றங்களைச் செய்திருந்தார். அந்த மாற்றத்திற்கு சனிக்கிழமை கைமேல் பலன் கிடைத்தது. வெற்றிக்கான மூன்று கோல்களையும் ரியாத் மஹ்ரெஸ் போட்டார். 43, 61 மற்றும் 66வது நிமிடங்களில் அவர் இந்த ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தினார்.
சொந்த அணிக்கு சூனியம்
மும்பை: மும்பை வான்கடே திடலில் நேற்று முன்தினம் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றிபெற மும்பை அணி யின் இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஜுன் டெண்டுல்கர் (படம்) ஓட்டங்களை வாரி வழங்கியதே காரணம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இப்போட்டியில் 15 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 118 ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்தது. 16ஆவது ஓவரை அர்ஜுன் டெண்டுல்கர் வீசினார். அதில் 2 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் உட்பட 31 ஓட்டங்களை விளாசியது சேம் கரன் - ஹர்பிரீத் ஜோடி. இந்த இடத்தில்தான் ஆட்டம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. வெற்றிபெறும் நம்பிக்கை பிறந்ததால் வீசப்பட்ட பந்துகளை எல்லாம் பஞ்சாப் வீரர்கள் விளாசித் தள்ளினர். அதன் காரணமாக கடைசி ஐந்து ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணி 96 ஓட்டங்களைக் குவித்தது. அர்ஜுன் டெண்டுல்கர் மோசமாக பந்து வீசியது ஆட்டத்தின் போக்கை மும்பை அணிக்கு எதிராகத் திருப்பியது என்றும் அதனால் அவர் சொந்த அணிக்கே சூனியம் வைத்து விட்டார் என்றும் சமூக ஊடகங்களில் அதிருப்தி கருத்துகள் வெளியாயின. 214 ஓட்டங்கள் என்னும் இலக்கைத் துரத்திய மும்பை அணியால் வெற்றிபெற இயலவில்லை.
இருமுறை உடைந்த 'ஸ்டம்ப்'
மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கடைசி ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங், இரு முறை மிடில் ஸ்டம்ப்பை உடைத்து பஞ்சாப் கிங்ஸ் அணியை வெற்றிபெறச் செய்துள்ளார். மூன்றாவது பந்தில் யார்க்கர் வீசி திலக் சர்மாவை கிளீன் போல்டாக்கியபோது மிடில் ஸ்டம்ப் உடைந்தது. அடுத்த பந்தையும் அவர் யார்க்கராக வீசியபோது வதேரா கிளீன் போல்டானார். விந்தையாக, அப்போதும் மிடில் ஸ்டம்ப் இரண்டாக உடைந்து விழுந்தது.

