கார்ட்டூம்: மோதல்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் இருந்து வெளியேறிய 101 பேரை ஏற்றிச்சென்ற ஜெர்மானிய ஆகாயப்படை விமானம், ஜெர்மனித் தலைநகர் பெர்லினில் நேற்றுக் காலை தரையிறங்கியது.
சூடானில் ராணுவப் படைக்கும் துணை ராணுவத்திற்கும் இடையேயான மோதல் இரண்டாவது வாரம் தொடரும் வேளையில், தலைநகர் கார்ட்டூமிலிருந்து தங்கள் குடிமக்களை வெளியேற்ற பல்வேறு நாடுகள் அவசரமாகச் செயல்பட்டு வருகின்றன.
கார்ட்டூமில் உள்ள தன் தூதரக ஊழியர்களும் அவர்களின் குடும்பத்தாரும் சுவீடன் நாட்டவர்கள் சிலரும் அருகில் உள்ள ஜிபூட்டிக்கு இடமாற்றப்பட்டு உள்ளதாக சுவீடன் தெரிவித்தது.
சூடானில் நிலவிவரும் மோதலில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துவிட்டனர். அரசதந்திரிகள், உதவி ஊழியர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
சூடானிலிருந்து வெளிநாட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கை ஆகாயவழி நடைபெற்று வருகிறது. கார்ட்டூமுக்கு வடகிழக்கே 650 கிலோமீட்டர் தூரத்தில் செங்கடலில் உள்ள சூடான் துறைமுகம் வழியாகவும் மக்களை வெளியேற்றும் பணி இடம்பெற்று வருகிறது.
கார்ட்டூம் அருகே உள்ள விமானத்திடலில் இருந்து இதுவரை 311 பேரை ஜெர்மானிய ஆகாயப்படை விமானம் வெளியேற்றியுள்ளதாக ராணுவம் கூறியது.
கார்ட்டூமில் உள்ள தனது தூதரகத்தை தான் மூடியுள்ளதாகவும் ஊழியர்களையும் அவர்களின் குடும்பத்தாரையும் தான் வெளியேற்றியுள்ளதாகவும் சுவிட்சர்லாந்து தெரிவித்தது.
தான் இதுவரை 388 பேரை சூடானிலிருந்து வெளியேற்றி உள்ளதாக பிரான்ஸ் நேற்று தெரிவித்தது.
பிரான்ஸ் தலைமையிலான மீட்பு நடவடிக்கையில் டென்மார்க் குடிமக்கள் 15 பேர் வெளியேற்றப்பட்டதாக டென்மார்க் வெளியுறவு அமைச்சு ராய்ட்டர்சிடம் கூறியது. சூடானிலிருந்து வெளியேற அறுவர் மறுத்துவிட்டனர்.

