பெய்ஜிங்: சாலையோரத்தில் தனியாக அமர்ந்திருந்த பெண் குழந்தையைத் தனது முதுகில் சுமந்தபடி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் அறிவுசார் குறைபாடு உள்ள ஒரு பதின்ம வயதுச் சிறுவன்.
இச்சம்பவம் சீனாவின் ஷான்சி மாநிலத்தில் நிகழ்ந்தது.
குழந்தை கடத்தப்படக்கூடும் என்ற அச்சம் 17 வயது ஹுவாங் யிபோவிற்கு இருந்தது.
அதனால் குழந்தையை சியென் நகர காவல் நிலையத்துக்கு அவர் கொண்டு சென்றார். ஏப்ரல் 7ஆம் தேதி நிகழ்ந்த இச்சம்பவம் கண்காணிப்பு கேமராக்களில் பதிவானது.
அந்தக் காணொளி, சீனாவின் சமூக வலைத்தளமான 'வீபோ'வில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
அதில் பலர் சிறுவனைப் பெரிதும் பாராட்டினர்.
"அன்பு செலுத்துவதற்கும் வீரத்துடன் செயல்படுவதற்கும் அறிவுசார் குறைபாடு தடையல்ல," என்று ஒருவர் பதிவிட்டார்.
"எதிர்காலத்தில் உன் பாட்டியுடன் நீ வெளியே செல்லும்போது, அவரின் கையைப் பிடித்துக்கொள். மறுபடியும் காணாமல்போய் விடாதே," என்று அச்சிறுமியிடம் அச்சிறுவன் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

