தோக்கியோ: திறன்பெற்ற வெளிநாட்டு ஊழியர்கள் நீண்டகால வேலை விசாவை பெறுவதற்கான துறைகளை மூன்றிலிருந்து 12ஆக உயர்த்துவது குறித்து ஜப்பான் பரிசீலித்து வருவதாக நிக்கெய் செய்தித்தாள் தெரிவித்தது.
ஜூன் மாத வாக்கில் நடப்புக்கு வரும் இந்த மாற்றத்தின்கீழ், உணவு உற்பத்தி போன்ற துறைகள் சேர்க்கப்படும் என்று நிக்கெய் குறிப்பிட்டது.
ஜப்பானில் மக்கள்தொகை மூப்படைந்து வருவதால் பல்வேறு துறைகளில் ஆள்பற்றாக்குறை நிலவுகிறது.
எனினும், வெளிநாட்டு ஊழியர்களை வரவழைக்க ஜப்பான் விருப்பம் காட்டவில்லை.
2019ல் நடப்புக்கு வந்த ஒரு சட்டத்தின்கீழ், வேளாண், தாதிமைப் பராமரிப்பு, துப்புரவு உள்ளிட்ட 14 துறைகளில் திறன்பெற்ற ஊழியர்களுக்கு ஜப்பானிய விசா வழங்கப்பட்டது.
கட்டுமானம், கப்பல் துறையில் பணிபுரிவோரைத் தவிர்த்து, அத்தகைய விசாவைப் பெறுவோர் ஜப்பானில் ஐந்து ஆண்டுகள் வரை தங்க முடியும்.
விசா மாற்றங்களுக்கு ஜூன் மாத வாக்கில் அமைச்சரவை ஒப்புதல் வழங்குவதற்கான பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக நிக்கெய் குறிப்பிட்டது.

